Published : 31 Jul 2019 12:32 PM
Last Updated : 31 Jul 2019 12:32 PM

உன்னாவ் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண் 12-ம்தேதி எழுதிய கடிதத்தை ஏன் என்னிடம் அளிக்கவில்லை?: தலைமை நீதிபதி கேள்வி

புதுடெல்லி,

உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி எழுதிய கடிதத்தை ஏன் என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை? என்று உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பங்கர்மாவு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார்,  கடந்த 2017-ம் ஆண்டு, சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  உன்னாவ் நகரில் உள்ள மகி போலீஸ் நிலையப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி, பாஜக எம்எல்ஏ செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார். முதல்வர் ஆதித்யநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்குளிக்க முயன்றபோதுதான் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவியது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி செங்காரை போலீஸார் கைது செய்தனர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண், அவரின் உறவினர் இன்னும் சிலர் காரில் தங்களுடைய வழக்கறிஞருடன் ரேபரேலி சிறையில் இருக்கும் உறவினரைச் சந்திக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அப்போது சாலையில் இவர்கள் சென்ற காரின் மீது லாரி ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் படுகாயமடைந்தார். உடன் சென்ற இரு பெண்கள் பலியாகினர். வழக்கறிஞர் ஒருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார். இது விபத்து என்று கூறப்பட்டாலும், இது விபத்து அல்ல. சதி இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்

லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை.யில் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், " நான் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினேன்.

அதில், என்னுடைய வீட்டுக்கு சிலர் வந்து எம்எல்ஏ செங்கார் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டுகிறார்கள். சிலர் என் உறவினர்கள் மீதும், குடும்பத்தினர் மீதும் போலியாக வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவதாக மிரட்டுகிறார்கள். எனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்" எனக் கேட்டு கடிதம் எழுதினேன் எனத் தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் பயணித்த காரை விபத்துக்குள்ளாக்கிய வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம் தொடர்பான செய்தி நாளேடுகளில் இன்று வந்திருந்தது. இதை அறிந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அதிர்ச்சி அடைந்தார். 

மேலும், போக்சோ வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் வி.கிரியை நீதிமன்றம் நியமித்து இருந்தது. போக்சோ வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுக்கக் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் கிரி போக்சோ வழக்குகளையும், உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம் குறித்தும் தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பேசுகையில், " உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எனக்குக் கடிதம் எழுதிய விவகாரம் எனக்குத் தெரியாது. இன்று காலை நாளேடுகளை வாசித்தபோதுதான் அது குறித்து அறிந்தேன். உடனடியாக உச்ச நீதிமன்றப் பதிவாளரை அழைத்துக் கேட்டபோது கடந்த 12-ம் தேதி அந்தக் கடிதம் எனக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. 

12-ம் தேதி அனுப்பிய கடிதத்தை ஏன் என் பார்வைக்குக் கொண்டு வரவில்லை என்று பதிவாளரிடம் நான் விளக்கம் கேட்டுள்ளேன். அந்தக் கடிதத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. மேலும், உன்னாவ் பலாத்கார வழக்கில் தற்போதுள்ள நிலை என்ன, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து குறித்த தகவல் அனைத்தும் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். 

துரதிர்ஷ்டவசமாக அந்தக் கடிதம் இன்னும் என்னிடம் வந்து சேரவில்லை. ஒருவேளை அந்தக் கடிதம் என்னிடம் உரிய காலத்தில் கிடைத்திருந்தால், சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முயற்சித்து, இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் தடுத்திருக்கலாம். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x