Published : 31 Jul 2019 10:12 AM
Last Updated : 31 Jul 2019 10:12 AM

காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் சிக்கியது எப்படி? மீனவர் அளித்த தகவலால் துப்பு துலக்கிய போலீஸார்

பெங்களூரு,

காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் இன்று ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதற்கு முக்கிய ஆதாரமாக மீனவர் அளித்த வாக்குமூலம் இருந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த்தா திங்கள்கிழமை மாலையில் இருந்து மாயமானார்.

தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள நேத்ராவதி ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தின் அருகே காரில்  திங்கள்கிழமை மாலையில் சென்ற சித்தார்த்தா காரை பாலத்தில் நிறுத்தக் கூறி ஓட்டுநரிடம் கூறியுள்ளார். சிறிதுநேரம் நடந்துவிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றவர் நீண்டநேரமாகியும் காணவில்லை. 


இது தொடர்பாக ஓட்டுநர்  அளித்த புகாரையடுத்து, 200க்கும் மேற்பட்ட போலீஸார், 25-க்கும் மேற்பட்ட படகுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சித்தார்த்தா தனது நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் ஆகியோர் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இன்று (புதன்கிழமை) அதிகாலை மங்களூரு அருகே ஹொய்கேபஜார் நதிக்கரையில் சித்தார்த்தாவின் சடலம் கிடைத்ததாக தட்சின கன்னடா துணை கமிஷனர் எஸ்.செந்தில் தெரிவித்தார். அவரின் உடலைப் பார்த்த குடும்பத்தினர் இறந்தது சித்தார்த்தாதான் என்பதை உறுதி செய்தனர். 

இதற்கிடையே கர்நாடகத்தில் பெய்துவரும் மழையால் நேத்ராவதி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சித்தார்த்தாவின் உடலை எங்கு கண்டுபிடிப்பது, உண்மையில் ஆற்றில் குதித்தாரா அல்லது தலைமறைவானாரா என்பது குறித்த கோணங்களில் எல்லாம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மீனவர் ஒருவர் அளித்த தகவலால்தான் போலீஸார் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டதை உறுதிசெய்து, தங்களின் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினார்கள். 

இதுதொடர்பா மங்களூரு போலீஸ் துணை ஆணையர் கோதண்டராம் நிருபர்களிடம் கூறுகையில், " காஃபிடே உரிமையாளர் சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்ததை மீனவர் சைமண்ட் டிசோசா என்பவர் தொலைவில் இருந்து பார்த்துள்ளார். ஆனால், ஆற்றில் குதித்தது சித்தார்த்தா என்பது தெரியாவிட்டாலும், ஆற்றில் ஓர் உருவம் குதித்ததை மட்டுமே உறுதிசெய்தார். 


சித்தார்த்தா ஆற்றுப்பாலத்தின் மீது சென்ற நேரம், அவர் 8-வது தூண் அருகே சென்றபோது மாயமானது, மீனவர் அளித்த வாக்குமூலம், அடையாளம் ஆகியவை அனைத்தும் பொருந்தியது. அதனால், சித்தார்த்தா ஆற்றில் குதித்ததை உறுதி செய்து ஆற்று நீரின்போக்கிற்கு ஏற்றார்போல் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உடலைக் கண்டுபிடித்தோம் " எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மீனவர் டிசோசா கூறுகையில், " நான் ஆற்றுப்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆற்றில் ஏதோபெரிய பொருள் விழுவதைப் போன்று சத்தம் கேட்டது, நான் திரும்பிப் பார்த்தபோது, ஒருநபர் ஆற்றில் குதித்து தத்தளித்துக்கொண்டிருந்தார். நான் உடனடியாக படகைத் திருப்பி அந்த இடத்துக்குச் செல்வதற்குள் அவரை ஆற்று நீர் அடித்துச் சென்றது. ஆற்றில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான நீர் சென்றதால் என்னால் நீந்த முடியவில்லை, கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்தது" எனத் தெரிவித்தார். 


காஃபிடே உரிமையாளர் சித்தார்த்தா குதித்த 8-வது தூண் பகுதியும், மீனவர் பார்த்த பகுதியும், கார் ஓட்டுநர் 8-வது தூண் அருகே சித்தார்த்தா காணாமல் போனதாகக் கூறியதும் போலீஸாருக்கு சந்தேகத்தைத் தீவிரப்படுத்தியது. 8-வது தூண் பகுதியில் இருந்து சித்தார்த்தாவைக் காணவில்லை என்று கார் ஓட்டுநர் திட்டவட்டமாகக் கூறியிருந்ததால், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x