

புதுடெல்லி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகாரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகனும் ‘ஹிந்துஸ்தான் பவர் புராஜெக்ட்ஸ்’ நிறுவனத்தின் தலைவருமான ரத்துல் புரிக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
மேலும் போலி நிறுவனங்களை தொடங்கி போலி பில்களை தயாரித்து வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கான ரூபாய்களை பெற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித் துறையும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில்தான், பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் 24 (3)-வது பிரிவின் கீழ், ரத்துல் புரிக்கு சொந்தமான ரூ.254 கோடி மதிப்பிலான பங்குகளை முடக்க டெல்லி வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - பிடிஐ