

மாயமான கஃபே காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் சடலம் ஹொய்கேபஜார் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று முன் தினம் மாலை (திங்கள்கிழமை) கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த அரசியல்வாதியான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த்தா மாயமானார்.
நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் சற்று நடந்துவிட்டு வருவதாக ஓட்டுநரிடம் சொல்லிச் சென்றவர் திரும்பவேயில்லை. இதனையடுத்து அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஊழியர்களுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும் அவர் எழுதிய கடிதம் சிக்கியதால் சித்தார்த்தா தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். நேத்ராவதி பாலத்துக்கு அடியில் தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஹொய்கேபஜார் நதிக்கரையில் சித்தார்த்தாவின் சடலம் கிடைத்ததாக தக்ஷின கன்னடா துணை கமிஷனர் எஸ்.செந்தில் கூறினார்.
முன்னதாக உள்ளூர் மீனவர்கள் உதவியை காவல்துறை நாடியிருந்தது. அவர்கள் சித்தார்த்தா மாயமான இடத்திலிருந்து ஆற்றில் குதித்திருந்தால் நீரோட்டத்தின் அடிப்படையில் எந்தப் பகுதியில் சடலம் கரை ஒதுங்க வாய்ப்பிருக்கிறது என்பதைத் தெரிவித்திருந்தனர். அதன்படி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பின் ஹொய்கேபஜார் பகுதியில் ஐஸ்கட்டி தயாரிப்பு தொழிற்சாலைக்கு அருகே சித்தார்த்தாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவரின் உடல் வென்லாக் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் மங்களூரு போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் கூறியிருக்கிறார்.