

புதுடெல்லி
நாடாளுமன்ற கூட்டத்தில் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் 260-48 என்ற வாக்குகள் அடிப்படையில் திங்கள்கிழமை நிறைவேறியது. மக்களவையில் பாஜகவுக்கு மட்டும் 303 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளுக்கு சுமார் 50 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என கூட்டத்தில் அமித் ஷா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் பிரிவு வாரியான வாக்கெடுப்பு கோருகின்றன. எனவே மசோதாக் களுக்கு அதிக ஆதரவு இருப்பதை உறுதி செய்ய பாஜக எம்.பி.க்கள் அவையில் தவறாமல் ஆஜராக வேண்டும் என அமித்ஷா கேட்டுக் கொண்டார். பாஜக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வரும் 3, 4 ஆகிய தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் உட்பட கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அமித்ஷா கேட்டுக்கொண்டார்” என்றார்.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை. நாடாளுமன்ற நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் கட்சியின் கொள்கைகள் குறித்து பாஜக எம்.பி.க்களுக்கு வரும் 3, 4 ஆகிய தேதிகளில் விளக்கப்பட உள்ளது.