Published : 30 Jul 2019 04:51 PM
Last Updated : 30 Jul 2019 04:51 PM

முத்தலாக் தடை மசோதாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்-மத்திய அரசு; அதிமுக வெளிநடப்பு; காங்கிரஸ் எதிர்ப்பு

முத்தலாக் தடை மசோதாவை அறிமுகம் செய்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி 

முத்தலாக் தடை மசோதாவை அரசியலாகவோ அல்லது வாங்கு வங்கி அரசியலாகவோ பார்க்காதீர்கள் என்று  மாநிலங்களவையில் மசோதாவை அறிமுகம் செய்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசினார்.

இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க, அதிமுக, ஐக்கிய ஜனதாதளம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

முஸ்லிம் பெண்களுக்கு கணவர்கள் மூன்று முறை தலாக் கூறும் முறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு தடைவிதித்து சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்ட மசோதா2019 மக்களவையில் கடந்த 16-வது மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து காலாவதியானது. 

இருப்பினும் அவசரச்சட்டத்தை மத்திய அரசு பிப்ரவரி 21-ம் தேதி பிறப்பித்து இருந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்ட மசோதா2019 உருவாக்கப்பட்டு கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் தடை சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: 
 
இந்த முத்தலாக் தடை சட்ட மசோதாவை அரசியல் ரீதியாகவோ அல்லது வாக்கு வங்கி அரசியலாகவோ பார்க்காதீர்கள். இந்த மசோதா பெண்களுக்கு பாலினரீதியாக மரியாதை, சமத்துவம், அதிகாரம், நீதி கிடைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

20-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளில்கூட இந்த முத்தலாக் முறையை முறைப்படுத்தி பல்வேறுவிதங்களில் சீரமைத்துவிட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு, ஆனால், துரதி்ர்ஷ்டவசமாக சில காரணங்களால் இது நடக்காமல் இருக்கிறது. முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம், அதை கடைபிடிக்க கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் முத்தலாக் முறையை யாரும் கடைபிடிக்கக் கூடாது அது சட்டவிரோதம் என்பதால் மத்திய அரசும் தடை செய்து மசோதா கொண்டுவந்தது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப்பின் முத்தலாக் கூறி 574 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றம் என்று கடந்த முறை அவசரச்சட்டம் இயற்றியபின் 101 வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 

முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிக்கு அற்ப காரணங்களுக்காக எல்லாம் முத்தலாக் கொடுத்தார்கள் என்று தகவல்கள்இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டபின்பும் அது நடைமுறைக்கு வரவில்லை, அதனால்தான் சட்டம் இயற்றிஇருக்கிறோம்

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத்  பேசினார்.

காங்கிரஸ் எம்.பி. அமீ யாக்னிக் பேசுகையில், " இந்த மசோதாவில் கிரிமினல் பிரிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஒரு பெண் தங்களின் குடும்ப பிரச்சினையை மாஜிஸ்திரேட் முன் எவ்வாறு கொண்டு செல்வார். இந்த மசோதாவுக்கு எதிராக நான் பேசவில்லை. அதில் உள்ள அம்சங்கள் மட்டுமே அதிருப்தியாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பாஷிஸ்தா நரேன் சிங் பேசுகையில், " சமூக கொடுமைகள் ஆழமாக வேர்பிடித்துவிட்டன, அதை வேரோடு பிடுங்க வேண்டியநேரம். இந்த மசோதாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேச இருக்கிறேன். ஜனநாயகத்தின் படி பார்த்தால் இந்த மசோதாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது. இன்று நான் மசோதாவை எதிர்க்கிறேன், நாளை ஆதரிக்கலாம் " எனக் கூறி வெளிநடப்பு செய்தார். 

பாஜக சார்பில் முக்தர் அப்பாஸ் நக்வி பேசுகையில் " உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தி, பெண்களுக்கு பிரதமர் மோடி அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. மாநிலங்களவைக்கு இந்த மசோதா அறிமுகம் செய்ததும், காங்கிரஸ் நிலைப்பாடு ஏன் மாறுகிறது.
மக்களவையில் ஆதரித்த காங்கிரஸ் மாநிலங்களவையில் எதிர்க்கிறது. இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நேரம் " எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், " இந்த மசோதா பெண்களை பாதுகாக்கும் என்று கூறுகிறது, ஆனால், இது முஸ்லிம் குடும்பங்களை சிதைத்துவிடும். சில அரிகாரப்பூச்சுகளுக்குப்பின் இந்த மசோதா மீண்டும் பழையமாதிரியாகத்தான் இருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் எல்லாம் இந்தியர்களாகவும்  மதச்சார்பற்றவர்களாகவும், சோசலிஸ்ட்களாகவும், ஜனநாயகவாதிகளாகவும்  இருப்பதில் பெருமை கொள்கிறோம். மற்ற நாடுகளின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.  
சிறுபான்மை குறித்த ஒவ்வொரு தீர்ப்புகளையும் நீங்கள் அமல்படுத்துகிறீர்களா. கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, சட்டம் கொண்டுவந்தீர்களா. இது சட்டவிரோத மசோதா.இது தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் " எனத் தெரிவித்தார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x