திப்பு ஜெயந்தியை கொண்டாட வேண்டாம்: கன்னட கலாச்சார துறைக்கு எடியூரப்பா அரசு உத்தரவு

திப்பு ஜெயந்தியை கொண்டாட வேண்டாம்: கன்னட கலாச்சார துறைக்கு எடியூரப்பா அரசு உத்தரவு
Updated on
1 min read

மைசூர் மாகாண மன்னராக இருந்த திப்பு சுல்தானை நினைவுகூரும் திப்பு ஜெயந்தியைக் கொண்டாட வேண்டாம் என கன்னட கலாச்சார துறைக்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவையில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. எடியூரப்பாவுக்கு 106 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், திப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 முதல் கொண்டாடப்படும் திப்பு ஜெயந்தி..

மைசூர் மாகாணத்தை ஆண்ட மன்னர் திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழா, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போதைய முதல்வராக இருந்த சித்தராமையா இந்த விழாவைக் கொண்டாட உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், திப்பு ஜெயந்தி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே இந்த விழாவுக்கு பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடகு பகுதியில் பலத்த வன்முறை வெடித்தது. பொது சொத்துகள் சேதமடைந்தன.

இதனிடையே எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த ஆண்டும் திப்பு ஜெயந்தி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தற்போது கார்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திப்பு ஜெயந்தியைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடைக்கு காரணமான கடிதம்:

கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரான போப்பையா முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் திப்பு ஜெயந்தியை அரசு விழாவாகக் கொண்டாடுவதை ரத்து செய்ய வேண்டும். இந்த விழாவுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது என்றும் இதனால் குடகு மாவட்டத்தில் மோசமான வன்முறை ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

போப்பையாவின் கடிதத்தின் அடிப்படையிலேயே திப்பு ஜெயந்தியை அரசு விழாவாகக் கொண்டாட தடை விதித்து அமைச்சரவையில் முடிவு எட்டப்பட்டதாகத் தெரிகிறது.

சித்தராமையா விமர்சனம்:

கர்நாடக முன்னாள் முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா இது குறித்து பேசும்போது, "இது மிக்கப்பெரிய குற்றம். திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தை நான் முதல்வராக இருக்கும்போதுதான் கொண்டாடத் தொடங்கினேன். இப்போது பாஜக சிறுபான்மையினர் மீதான வெறுப்பின் பேரில் இந்த கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. திப்பு சுல்தான் சிறுபான்மையினர் மட்டுமில்லை. அவர் மைசூரு மாகாண மன்னராக இருந்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தவர். அவர்தான் கே.ஆர்.எஸ். அணைக்கு அடிக்கல் நாட்டினார். அவரின் ஆட்சி காலத்தில் மைசூரு பெரும் வளர்ச்சி கண்டது. என்னைப்பொறுத்த வரை திப்பு சுல்தானே இந்நாட்டின் முதல் சுதந்திரப் போராளி. ஆனால், பாஜகவினருக்கு மதச்சார்பின்மை சிறிதும் இல்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in