2ஜி வழக்கு: விரைந்து விசாரிக்க கோரும் சிபிஐ மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கை விரைந்துவிசாரிக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை, அரசு தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிவிட்டது எனக் கூறி கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. 

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது, அடுத்தநாளில் சிபிஐ அமைப்பும் மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 24-ம் தேதிமுதல் தொடங்கும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் முன்பு அறிவித்திருந்தது. ஆனால், முன்கூட்டியே விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று கோரி சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.சாவ்லா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜனரல் சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், " இந்த வழக்கின் விசாரணையை விரைவாகத் தொடங்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. முதலீடு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் நிலுவையில் இருக்கின்றன " எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி ஏ.கே.சாவ்லா கூறுகையில், " இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 24-ம் தேதி முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் அந்த தேதியில் இணைவார்கள் என்று எதிர்பார்கிறோம். ஆதலால், மனுவை அவசரகதியில் விசாரிக்க முடியாது " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in