என்எம்சி மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு புதன்கிழமை இயங்காது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,

தேசிய மருத்துவ ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, நாளை (புதன்கிழமை) நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருக்கும் புறநோயாளிகள் பிரிவு மூடப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேசிய அளவில் நடத்தப்படும் இந்த ஒருநாள் அடையாளப் போராட்டத்துக்கு அனைத்து மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் ஐஎம்ஏ சார்பில் ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஐஎம்ஏ கேட்டுக்கொண்டுள்ளது. 

அதேசமயம், உள்நோயாளிகள் பிரிவு எந்தவிதமான இடையூறும் இன்றி இயங்கும். தி பெடரேஷன் ஆப் ரெஸிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன், ரெஸிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆகியோர் கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வருமாறு ஐஎம் ஏ சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த மசோதாவில் திருத்தம் செய்யாவிட்டால் மருத்துவக் கல்வியின் தரத்தை சீர்குலைப்பதோடு, சுகாதார சேவையின் தரத்தையும் குறைத்துவிடும் என்று ரெஸிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது

இதன்படி அத்தியாவசியமில்லாத சேவைகள் அரசு மருத்துவமனைகளில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணிவரை மூடப்படும். அதேசமயம் அவசர சிகிச்சை, விபத்துப் பிரிவு, ஐசியூ உள்ளிட்ட தொடர்பான சிகிச்சைப் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆர்.பி.அசோகன் கூறுகையில், " தேசிய மருத்துவ ஆணையம், அங்கீகாரம் இல்லாத 3.5 லட்சம் மருத்துவர்களுக்கு நவீன மருத்துவத்தில் பயற்சி பெற அங்கீகாரம் வழங்க பிரிவு 32-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூதாய மருத்துவ சேவை செய்பவர்கள் கூட என்எம்சியில் பதிவு செய்து நவீன மருத்துவத்தில் பயிற்சி பெறலாம், அங்கீகாரம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மருந்தாளுநர்கள், செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட், கண் சிகிச்சை அளிப்போர் உள்ளிட்ட பலரும் நவீன மருத்துவத்தில் பயிற்சி பெற்று சுயமாக சேவை செய்யலாம் என்று வந்துவிடும். போலி மருத்துவத்தைச் சட்டமாக்குகிறது " எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in