

புதுடெல்லி,
கஃபே காஃபி டே தலைவர் சித்தார்த்தா திடீரென மாயமானதைத் தொடர்ந்து அவர் நிறுவனத்தின் பங்குகள் விலை பங்குச்சந்தையில் கடுமையாகச் சரிந்துள்ளன.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எஸ்.கிருஷ்ணாவின் மருமகன், கஃபே காஃபி டே தலைவரும், மேலாண் இயக்குநருமான சித்தார்த்தா. தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள நேத்ராவதி ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தின் அருகே காரில் நேற்று மாலையில் சென்ற சி்த்தார்த்தா காரை பாலத்தில் நிறுத்தக் கூறி ஓட்டுநரிடம் கூறியுள்ளார். சிறிதுநேரம் நடந்துவிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றவர் நீண்டநேரமாகியும் காணவில்லை.
இது தொடர்பாக ஓட்டுநர் அளித்த புகாரையடுத்து, 200க்கும் மேற்பட்ட போலீஸார், 25-க்கும் மேற்பட்ட படகுகள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே சித்தார்த்தா தனது நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது.
மங்களூரு போலீஸ் ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், " மீனவர்கள் உதவியுடன் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடைசியாக யாரிடம் எல்லாம் சித்தார்தா போனில் பேசியுள்ளார் எனும் விவரங்களை எல்லாம் சேகரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே முதல்வர் எடியூரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா இல்லத்துக்கு இன்று காலை சென்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதற்கிடையே கஃபே காஃபி டே சித்தார்த்தா காணாமல் போன விவரம் கசிந்ததையடுத்து, பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிவைச் சந்தித்துள்ளன.
கஃபே காஃபி டே நிறுவனம் பங்குச்சந்தையில் அளித்துள்ள கடித்ததில் " கஃபே காஃபி டே தலைவரும், மேலாண் இயக்குநருமான சித்தார்த்தா நேற்று மாலையில் இருந்து காணவில்லை. அதிகாரிகள் உதவியை நாடி இருக்கிறோம். கஃபே காஃபி டே நிறுவனம் உரிய தலைமையுடன் கட்டுக்கோப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது, வர்த்தகத்தை தொடர்ந்து உறுதி செய்வோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஃபே காஃபி டே சித்தார்த்தா காணாமல் போன விவரம் பங்குச்சந்தையில் கசிந்துடன் அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்து 52 வாரங்களில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.154.05பைசாவுக்கு சரிந்துள்ளது.
பிடிஐ