Published : 30 Jul 2019 11:02 AM
Last Updated : 30 Jul 2019 11:02 AM

கார் விபத்தில் சிக்கிய உன்னாவ் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா

உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்காருக்கு விரைவில் தண்டனை வழங்கக் கோரி அவரால் பாதிக்கப்பெட்ட பெண்ணின் உறவினர்கள் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனையின் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நேற்று (திங்கள்கிழமை) உத்தரப் பிரதேச எம்எல்ஏவால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அவர் வாகனத்தில் மோதிய ட்ரக்கில் நம்பர் ப்ளேட் கறுப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது.

இந்த விபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் படுகாயமடைந்தார். அவருடன் சென்ற இரண்டு பெண்கள் பலியாகினர். இளம்பெண்ணின் வழக்கறிஞர் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் இந்த விபத்து தற்செயலானது அல்ல என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குல்தீப் செங்காருக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும். சிறையில் உள்ள தங்களின் உறவினர் மகேஷ் சிங்கை விரைந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி இளம் பெண்ணின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சந்திப்பு:

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை லக்னோ மருத்துவமனையில் சந்தித்தார். விபத்தில் சிக்கிய அந்த பெண்ணும் அவரது வழக்கறிஞரும் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள ஏதேனும் சிறந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். குல்தீப் செங்காரை இன்னும் எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யாத மத்திய, மாநில அரசுகளை அவர் கண்டித்தார். 

உன்னாவ் வழக்கு ஒரு மீள் பார்வை..

கடந்த 2017-ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ., குல்தீப் செங்கார் மீது சிறுமி (அப்போது அவருக்கு வயது 16) ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். உறவினர் ஒருவருடன் எம்.எல்.ஏ.,வின் வீட்டுக்கு வேலை கேட்டுச் சென்றபோது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த சிறுமி கூறினார்.

இந்த வழக்கில் புகார் கூறிய சிறுமியின் தந்தையையே போலீஸார் கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் இறந்தார். தனது தந்தையை குல்தீப் செங்காரின் சகோதரர் அடித்துக் கொன்றதாக சிறுமியும் அவரது உறவினர்களும் புகார் கூறினர்.

ஆனால், போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 2018 ஏப்ரல் 8-ம் தேதி சிறுமியும் அவரது தாயாரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் முன்னர் தீக்குளிக்க முயற்சித்தனர்.

நாடு முழுவதும் இச்சம்பவம் பரவ வழக்கு சிபிஐ வசம் சென்றது. சிபிஐ விசாரணையில் சிறுமி பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது. குல்தீப் செங்காரும் அவரது சகோதரர் அடுல் செங்காரும் கைது செய்யப்பட்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x