

புதுடெல்லி
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் பிஹாரில் நேற்று புதிய ஆளுநர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
உ.பி. ஆளுநராக ஆனந்திபென் படேல் பதவியேற்றார். தலைநகர் லக்னோவில் நடைபெற்ற விழா வில் அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரி கள் பங்கேற்றனர். ஆனந்தி பென் இதற்கு முன் ம.பி. ஆளுநராக பதவி வகித்து வந்தார். உ.பி. ஆளுநர் ராம் நாயக் பணி ஓய்வு பெறுவதையொட்டி இங்கு மாற்றப்பட்டார்.
இதுபோல் ம.பி. ஆளுநராக லால்ஜி தாண்டன் பதவியேற்றார். போபாலில் நடைபெற்ற விழாவில் அவருக்கு உயர் நீதிமன்ற இடைக்கால தலைமை நீதிபதி ஆர்.எஸ்.ஜா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
விழாவில் முதல்வர் கமல்நாத், சபாநாயகர் என்.பி.பிரஜாபதி, எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லால்ஜி தாண்டன் இதற்கு முன் பிஹார் ஆளுநராக பணியாற்றி வந்தார்.
இதுபோல் பிஹார் ஆளுநராக பாகு சவுகான் (71) நேற்று பதவியேற்றார். பாட்னாவில் நடைபெற்ற விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாகி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.
பாகு சவுகான், உ.பி.யைச் சேர்ந்தவர். உ.பி. சட்டப்பேரவை யில் பாஜக மூத்த உறுப்பினராக விளங்கிய இவர், கடந்த 20-ம் தேதி பிஹார் ஆளுநராக நியமிக் கப்பட்டார். இதையடுத்து எம்எல்ஏ பதவியை கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். மாவ் மாவட் டம், கோசி தொகுதியில் இருந்து 6 முறை இவர் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.