Published : 29 Jul 2019 08:01 PM
Last Updated : 29 Jul 2019 08:01 PM

மருத்துவ ஆணைய மசோதா அரசியல் சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது -மக்களவையில் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேசிய மருத்துவ ஆணைய மசோதா, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் குற்றம் சாட்டி உள்ளார். இதை தமது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி(சிபிஎம்) எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீது சிபிஎம் கட்சியின் மதுரை தொகுதி எம்.பியான சு.வெங்கடேசன் பேசியதாவது: இந்த சட்ட வரைவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது . சமூகநீதிக்கு எதிரானது.

இந்தியாவில் அதிகமான மருத்துவர்களை தருகிற மாநிலம் தமிழ்நாடு. ஆனால் அது இன்றைக்கு நீட் உள்ளிட்ட தேர்வுகளால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அதிலும் இந்த சட்ட வரைவு தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனியார் கல்லூரியில் கட்டணத்தை முழுமையாக கட்டுப்படுத்த சட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இந்த புதிய மசோதா 50 சதவீதமாக இடத்திற்கான கட்டணத்தை மட்டுமே ஒழுங்கு செய்கிறது; மீதம் 50 சதவீதமான கட்டணத்தை கட்டுப்படுத்த முடியாது. அதை கல்லூரிகளே முடிவு செய்யலாம்.

அதேபோல தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் 100 சதவீத கட்டணத்துக்கும் கட்டுப்பாடு இல்லை. நீங்கள் நீட்டைக் கொண்டு வந்தபோது என்ன சொன்னீர்கள்? வணிக மையத்தை முழுமையாக எதிர்ப்பதற்காக தான் தடுப்பதற்காகத்தான் கொண்டு வருவதாகச் சொன்னீர்கள்.

ஆனால் இன்றைக்கு உங்களது நோக்கம் முழுமுற்றாக தோல்வி அடைந்திருக்கிறது. அப்போது நன்கொடையாகக் கொடுத்தவர்கள் இப்பொழுது கட்டணமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

டாக்டர்.ராய் சவுத்திரி கமிட்டி 2014 நாடாளுமன்றத்தினுடைய நிலைக்குழு அறிக்கை 92 வது குறிப்பில், ‘தனியார் கல்லூரிகளுடைய தவறான நடவடிக்கையை கட்டுப்படுத்த தான் இவற்றை நாங்கள் கொண்டு வருகிறோம். மாநில அரசு இவற்றை விரும்பவில்லை என்றால் கட்டாயப்படுத்தக்கூடாது.’ எனக் கூறுகிறது.

ஆனால் நீங்கள் இரண்டையும் மீறினீர்கள். இன்றைக்கு மாநில அரசின் உரிமைகள் முழு முற்றாக அழிக்கப்படுகின்றன. அரசியல் சாசன சட்ட விவாதத்தினுடைய தொகுப்புரையில் சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்கள் நவம்பர் 25, 1949 ல் குறிப்பிட்டார்

அதில், அவர், ‘மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற உரிமை அரசியல் சட்டத்தால் கொடுக்கப்பட்டதே ஒழிய மத்திய அரசால் கொடுக்கப்பட்டது அல்ல. எனவே அந்த எல்லைக் கோட்டை மத்திய அரசு நினைத்த போது மாற்ற முடியாது.’ எனக் கூறினார்.

ஆனால் நீங்கள் மாற்ற கூடவில்லை முழு முற்றாக அழிக்க நினைக்கிறீர்கள். 17வது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதலில் இருந்து இப்போது வரை மாநில அரசுகளின் உரிமைகள் மீது இரக்கம் அற்ற தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் இந்த அவையின் மீது இந்த வகையிலேயே நடத்தப்படுகிறது.

மருத்துவர்கள் தங்களுக்குள்ளேயே தேர்வு செய்கிற உயர் அமைப்புகளாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு கொண்டு வந்துள்ள இந்த புதிய மசோதா ஆறு மாநிலங்களினுடைய பிரதிநிதிகள் தான் ஏக காலத்திலே இந்த கவுன்சிலிலே இருப்பார்கள்.

ஏறக்குறைய 23 மாநிலங்களினுடைய பிரதிநிதிகள் எப்போதும் இந்த உயர் கமிட்டிகளில் இருக்க முடியாது என்ற நிலை இருக்கிறது. எனவே இப்போது கொண்டு வந்திருக்கும் இந்த புதிய சட்ட மசோதாவை முழுமுற்றாக நாங்கள் எதிர்க்கிறோம்.

இது அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது. சமூக நீதிக்கும் எதிரானது என்பதை இங்கே பதிவு செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x