Last Updated : 29 Jul, 2019 06:39 PM

 

Published : 29 Jul 2019 06:39 PM
Last Updated : 29 Jul 2019 06:39 PM

அணைகள் பாதுகாப்பு மசோதா கூறுவது என்ன? மாநிலங்கள் எதிர்ப்பு ஏன்?

நாடு முழுவதும் உள்ள அணைகளை ஒரே சீராக பாதுகாப்பது பற்றியது அணை பாதுகாப்பு மசோதாவாகும். இது மக்களவையில் 3-வது முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. 

முதன் முறையாக 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அது நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலைக்குழு ஜூன் 2011-ல் தன் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன் பிறகு 15 மற்றும் 16-ம் லோக்சபா அமர்வுகளில் இந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சிகள் எதிர்ப்பினால் தோல்வியடைந்தன. 

இந்த மசோதா கூறுவதென்ன?

நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல் முறை மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். அதாவது பேரழிவுகளைத் தடுக்கும் விதமாக இந்த மசோதா அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 10 மீ. உயரம் கொண்ட குறிப்பிட்ட வடிவமைப்பு மற்றும் அமைப்பியல் நிலைமைகள் உள்ள அணைகளுக்கு இந்த மசோதா பொருந்தும். 

அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட நிர்வாகத்திற்காக அணைகள் பாதுகாப்பு தேசியக் குழு (NCDS) அமைக்கப்படுவதை இந்த மசோதா சாத்தியமாக்குகிறது. அணைகளின் பாதுகாப்பு தர நிலைகள் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை வகுக்க இந்த தேசியக்குழு அமைக்கப்படுகிறது. இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்படும். 

மாநிலங்கள் மட்டத்தில் அணை பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. அணைகளுக்கான மாநிலக் குழு இதன் பணிகளைச் சீராய்வு செய்யும். 

மாநிலங்கள் எதிர்ப்பு ஏன்?

இந்த மசோதா முந்தைய மக்களவை அமர்வுகளில் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மாநில அரசுகளின் எதிர்ப்புகளே காரணம். மாநிலங்களின் எதிர்ப்பு என்பது இருமுனை கொண்டது. தண்ணீர் என்பது மாநிலப் பட்டியலில் வரும்போது அதன் அணைகளை மட்டும் மத்தியக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 

தமிழ்நாடு குறிப்பாக இந்த மசோதாவை எதிர்த்தே வந்துள்ளது. இந்த மசோதாவின் படி சர்ச்சைக்குரிய முல்லைப் பெரியாறு அணை உட்பட 4 அணைகள் குறித்த தகவலை கேரளாவிடம் பகிர்ந்து கொள்வதை வலியுறுத்துகிறது. இதுதான் தமிழக எதிர்ப்புக்குக் காரணம். 

கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் உட்பட சில மாநிலங்கள் இந்த மசோதாவை மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கின்றன. அரசியல் சாசனம் புனிதமாக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இந்த மசோதா எதிரானது என்று கூறுகின்றனர், பாதுகாப்பு அக்கறை என்ற பெயரில் தங்கள் அதிகாரத்தைத் திடமாக்கும் முயற்சியே இது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அணைகள் தேசியப் பாதுகாப்பு குழு என்ற கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினராக மத்திய நீராதார ஆணையப் பிரதிநிதி இருக்க வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. அதாவது மத்திய நீராதார ஆணையம் ஆலோசகராகவும் ஒழுங்கமைப்பாளராகவும் செயலாற்ற வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசியல் சாசன ரீதியாக இதனை அனுமதிக்க முடியாது என்பதே. 

இந்த மசோதாவின் பிரிவு 23(1) என்பதுதான் தமிழ்நாட்டின் பெரிய கவலையாக எழுந்துள்ளது. ஒரு மாநிலத்தின் அணைகள் அண்டை மாநிலத்தின் பகுதிகளில் இருந்தால் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் பணியைத் தன் கையில் எடுத்துக்கொண்டு செயலாற்றும். இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகளைத் தீர்க்க முடியும். 

இந்தப் பிரிவு 4 அணைகள் உள்ள மாநிலத்துக்கு கவலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைக்கட்டுகள் இங்கு சொந்தமானாலும் கேரளா நிலப்பரப்பிலும் அது உள்ளது என்பதே. தற்போது இந்த அணைகள் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களினால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் இந்த மசோதாவின் இந்தப் பிரிவின் படி அணைக்கட்டுக்கு உரிமையுடைய மாநிலம் இன்னொரு மாநிலத்திலும் இருக்கும் இந்த அணைக்கட்டுகளின் பாதுகாப்பு மற்றும் பரமாரிப்பில் எந்த வித உரிமையும் கோர முடியாததாகிறது. 

மத்திய அரசு ஏன் இப்போது இந்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும்?

இந்தியாவில் மொத்தம் 5,344 பெரிய அணைகள் உள்ளன. இதில் சுமார் 293 அணைகள் 100 ஆண்டுகளுக்கும் கூடுதலான பழமை வாய்ந்தது. 1041 அணைகள் 50 முதல் 100 ஆண்டுகள் வரை பழமையானது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். இந்த அணைக்கட்டுகளில் 92% அணைகள் மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகளின் மேல் கட்டப்பட்ட அணைகளாகும். இதில் விபத்துகள் பற்றிய கவலைகளால் இதன் பராமரிப்பு கால இடைவெளி மற்றும் திறம்பட்ட பராமரிப்பு ஆகியவை பற்றி கேள்விகள் எழுந்துள்ளன. 

உதாரணமாக, மகாராஷ்டிரா கொங்கன் பகுதியில் ரத்னகிரியில் உள்ள திவாரே அணையில் உடைப்பு ஏற்பட்டு ஜூலை 3, 2019-ல் 23 பேர் பலியானதாக அஞ்சப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் அணையைப் பழுதுபார்க்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இந்த அணை 14 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாயினும் அணையில் பிளவுகள் இருந்தது என்று எச்சரிக்கையும் செய்துள்ளனர். இந்த அணை எந்த தாசில்தார் பகுதியில் வருகிறது என்ற பிரச்சினையில் கிராமத்தினரின் மனுக்கள் நிராகரிப்பு அடைந்ததாக புகார்கள் எழுந்தன. 

இது போன்ற பிரச்சினைகள்தான் தேசிய மட்டத்தில் பாதுகாப்பு கமிட்டி அமைத்து நாடு முழுதும் அணைகள் பாதுகாப்பை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உறுதி செய்யம் முடிவை எடுக்க வைத்ததாகத் தெரிகிறது.  

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x