‘‘ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம்’’ - பரூக் அப்துல்லாவுக்கு மெஹபூபா திடீர் அழைப்பு

‘‘ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம்’’ - பரூக் அப்துல்லாவுக்கு மெஹபூபா திடீர் அழைப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளது என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு அரசியல் எதிரியாக விளங்கும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்காகவும் கூடுதலாக 10 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. காஷ்மீரில் ஏற்கெனவே 40 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்பும் மத்திய அரசின் முடிவுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பல கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 
இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் 20-ம் ஆண்டு விழா இன்று ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் ‘‘ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இதுவரை இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த மாநிலத்துக்கு கூடுதல் படைகளை அனுப்பும் மத்திய அரசின் முடிவால் மக்கள் கலங்கி போயுள்ளனர். உடனடியாக அனைத்துக் கட்சிகளை கூட்டி விவாதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பரூக் அப்துல்லாவுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளது’’ என பேசினார். 
காஷ்மீரில் இருகட்சித் தலைவர்களும் அரசியல் எதிரிகளாக கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in