

மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்பகர் இன்று பதவி விலகினார். காங்கிரஸில் இருந்து விலகிய அவர் விரைவில் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வால்டா தொகுதி எம்எல்ஏ காளிதாஸ் கொலம்பகர். காங்கிரஸ் எம்எல்ஏவான இவர் முன்பு சிவசேனாவில் இருந்தவர். இதேதொகுதியில் சிவசேனா சார்பில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த அவர் முன்னாள் முதல்வர் நாராயணன் ரானேவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
அவருடன் இவரும் காங்கிரஸில் இணைந்தார். இந்தநிலையில் அவர் காங்கிரஸில் இருந்து இன்று விலகியுள்ளார். மேலும் தனது எம்எல்ஏ பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். அவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது.
நாளை அல்லது நாளை மறுதினம் அவர் முதல்வர் பட்னவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைவார் எனத் தெரிகிறது. கொலம்பகர் மட்டுமின்றி வேறு சில காங்கிரஸ் எம்எல்ஏக்களும் முதல்வர் பட்னவிஸுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.