

புதுடெல்லி,
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவர உள்ள தேசிய மருத்துவ ஆணைய(என்எம்சி) மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நிர்மான் பவன் நோக்கி மருத்துவர்களும், மாணவர்களும் பேரணியாகச் செல்ல முயன்றபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சிறிது நேரத்துக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதற்கான மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த என்எம்சி மசோதாவுக்கு மருத்துவர்கள், மாணவர்களை உள்ளடக்கிய இந்திய மருத்துவக் கழகம்(ஐஎம்ஏ) கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
மத்திய அரசு கொண்டுவரும் என்எம்சி மசோதா, ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் எதிரானது, பல்வேறு குறைபாடுகளை தேசிய மருத்துவக் கவுன்சிலில் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியும் அது களையப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நிர்மல் பவனை நோக்கி இன்று காலை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாணவர்கள் பேரணியாகவும், போராட்டம் நடத்தவும் சென்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
அப்போது ஐஎம்ஏ அமைப்பின் தலைவர் மருத்துவர் சாந்தனு சென் கூறுகையில், " மருத்துவக் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களிலேயே மிகவும் மோசாமானது என்எம்சி மசோதா. இந்த மசோதா மருத்துவக் கல்வியையே சிதைத்துவிடும். இந்த மசோதா மக்களுக்கும், ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் எதிரானது, ஜனநாயகத்துக்கும் விரோதமானது. எந்த என்எம்சி மசோதாவை நிறைவேற்றவிடாமல் தொடர்ந்து எதிர்ப்போம் " எனத் தெரிவித்தார்.
இந்த மசோதாவில் நெக்ஸ்ட் மற்றும் நீட் தேர்வுகள் கொண்டு வருவதையும், மருத்துவக் கட்டணத்தை முறைப்படுத்த என்எம்சிக்கு அதிகாரம் இருப்பதையும், தனியார் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதையும் ஐஎம்ஏ கடுமையாக எதிர்க்கிறது.
மேலும், 50 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களே முடிவு செய்யலாம் என்ற அம்சத்துக்கும் ஐஎம்ஏ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பிடிஐ