நம்பி நம்பி 28 ஆண்டுகள் கடந்து விட்டன; ‘இனியும் இந்த ஏழைத்தாயை ஏமாற்ற வேண்டாம்’: அற்புதம்மாள் சோகம்

அற்புதம் அம்மாள்-அமித்ஷா: கோப்புப்படம்
அற்புதம் அம்மாள்-அமித்ஷா: கோப்புப்படம்
Updated on
2 min read

மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் பேட்டி அளித்த அற்புதம்மாள், நம்பி நம்பித்தான் 28 ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன், இனியும் இந்த ஏழைத் தாயை ஏமாற்ற வேண்டாம், என  சோகத்துடன் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேர், கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என, உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்காக தமிழக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தது. அந்த தீர்மானம் அனுப்பப்பட்டு 10 மாதங்களைக் கடந்தும், ஆளுநர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. 

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து, எழுவர் விடுதலை தொடர்பாக மனு அளித்தார். அப்போது, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக உறுப்பினர் டி.ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் பேசியதாவது:

"ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடங்கி 28 ஆவது ஆண்டு இது. இந்த எழுவர் விடுதலைக்காக ஏற்கெனவே என்னென்ன செய்திருக்கிறோம், ஏற்கெனவே இருந்த 26 பேருக்கு என்னென்ன செய்திருக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கிடையில் பேரறிவாளனுக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என வழக்கை விசாரித்த அதிகாரிகளுள் ஒருவரான தியாகராஜன் கூறியுள்ளார். அப்போதே என் மகன் விடுதலையாவார் என எதிர்பார்த்தேன். அதற்கடுத்து, இந்தக் கொலையில் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன, இந்த வழக்கில் குளறுபடிகள் உள்ளன என நீதிபதியும் சொன்னார்.

அப்பொழுதும் விடுதலையாகவில்லை. உச்ச நீதிமன்றம் ஆளுநர் ஒப்புதலுடன் ஏழு பேரை விடுதலை செய்யலாம் என்று கூறியது. அப்போதும், விடுதலை செய்யவில்லை,. அதற்காகத் தான் உள்துறை அமைச்சரைச் சந்திக்க வந்தோம். 

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161 மாநில உரிமை. இருப்பினும் என் மகன் வாழ்க்கை சிறையிலேயே கழிகிறது. விடுதலை என அறிவித்தும் சிறையிலிருப்பவர்கள் இவர்கள்தான். 

நான் கட்சி சார்பற்று எல்லோரையும் சந்திக்கிறேன். என் மகனுக்கு வாழ்க்கை அமைத்துத் தர நான் போராடுகிறேன். இந்த முயற்சியையும் மேற்கொண்டேன். மத்திய அமைச்சர் நன்றாக வரவேற்றுப் பேசினார். ஆலோசனை செய்து முடிவெடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் குறித்தும் மனுவில் தெரிவித்துள்ளோம். வேண்டுமென்றால் அவரிடம் விசாரிக்கலாம். அவரிடமிருந்து பதில் வரும். காத்திருக்கிறோம்.  அமைச்சரைச் சந்தித்த தகவல் ஆளுநருக்கும் அனுப்பப்படும் எனத் தெரிகிறது. அவர் ஒரு கையெழுத்திட்டால் ஏழு பேரின் சிறைவாசம் முடிவுக்கு வரும்.

அதை எதிர்பார்த்துதான் இங்கு வந்திருக்கிறேன். இனியும் இந்த ஏழைத் தாயை யாரும் ஏமாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் நான் வைக்கின்றேன்".

இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

நீதிமன்றப் படி இனி ஏறாதீர்கள் என நீதிமன்றமே தெளிவாகச் சொல்லிவிட்டது. வழக்கு முடிந்துவிட்டது. ஆளுநர் கையெழுத்திட்டால் விடுதலை என சொல்லிவிட்டது. உச்ச நீதிமன்றத்தைத் தாண்டி வேறு எந்த நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்?

 முடிவெடுப்பதில் தாமதம் குறித்து ஆளுநரிடம் அறிக்கை கேட்பதாக அமித் ஷா சொன்னாரா?

 அப்படி எதுவும் கூறவில்லை.

அமைச்சரைச் சந்தித்த பின் மகன் விடுதலையாவார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

நான் நம்பி நம்பித்தான் 28 ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன்.

இவ்வாறு அற்புதம்மாள் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in