

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என, உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்காக தமிழக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தது. அந்த தீர்மானம் அனுப்பப்பட்டு 10 மாதங்களைக் கடந்தும், ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து, எழுவர் விடுதலை தொடர்பாக மனு அளித்தார். அவருடன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமித்ஷாவிடம் மனுவை அளித்து நிலையை விளக்கினார் திருமாவளவன், அற்புதம்மாளை அமித்ஷாவுக்கு அறிமுகப்படுத்தினார் திருமாவளவன். தனது மகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கவேண்டும் என தன் கோரிக்கை மனுவை அற்புதம்மாள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "எழுவர் விடுதலை தொடர்பாக, மத்திய அரசு, உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இவ்விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்க முடியாது என்றாலும்கூட, ஆளுநரிடம் தாமதம் குறித்துக் கேட்பதற்கு வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்தார்.
அப்போது, திமுக ஆட்சியில் எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுத்திருக்கலாமே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அது கடந்துபோன விஷயம். அந்தந்த காலங்களில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும், இது உணர்வுப்பூர்வமான அரசியல் சிக்கல் என்பதால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த தயக்கங்கள் இந்த ஆட்சியிலும் இருக்கின்றன", என திருமாவளவன் தெரிவித்தார்.