

புதுடெல்லி
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
நாடுமுழுவதும் அணைகளின் பாதுகாப்புக்கு ஒரே வழிமுறைகளை வகுக்கும் திட்டத்தில் மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதன்படி அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படுகிறது. அணை பாதுகாப்பு தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும்.
இச்சட்டப்படி மாநிலங்கள் அணைகளை பாதுக்க தனியாக ஆணையத்தை உருவாக்க வேண்டும். இந்த ஆணையத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். மேலும் ஒரு மாநிலத்துக்கு சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய அணை ஆணையம் மேற்கொள்ளும்
தமிழகத்துக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன.
மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நான்கு அணைகளையும் தமிழ்நாடு அரசு தான் நிர்வகித்து பராமரித்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் இந்தப் புதிய மசோதா தமிழகத்துக்குச் சொந்தமான மேற்சொன்ன 4 அணைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வழிவகுக்கிறது.
இந்த மசோதாவுக்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை தாக்கல் செய்து பேசிய மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நாட்டின் மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் மீது மீது தான் 92% அணைகள் உள்ளதாகவும், எனவே அணைகள் பராமரிப்பில் மத்திய அரசின் பங்கு முக்கியம் எனக் கூறினார்.