Published : 29 Jul 2019 12:27 PM
Last Updated : 29 Jul 2019 12:27 PM

காருக்கு வழிவிடவில்லை எனக் கூறி போலீஸ்காரரின் சீருடையை  கழற்ற சொன்ன நீதிபதி பணியிட மாற்றம்

ஆக்ரா

உத்தரபிரதேசத்தில் தனது காருக்கு வழி விடவில்லை எனக்கூறி, ஒரு போலீஸ்காரரின் சீருடையை கழற்றச் சொன்ன 
நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச காவல் துறையில் ஓட்டுநராக பணிபுரிகிறார் குரேலால் (58). இவர் நேற்று முன்தினம், ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு கைதியை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வாகனத்துக்குப் பின்னால் ஆக்ரா மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் கார் வந்துள்ளது. பல முறை ஹார்ன் அடித்தும் போலீஸ் வாகனம் நீதிபதியின் காருக்கு வழி விடவில்லை என கூறப்படுகிறது.  இதையடுத்து, குரேலாலை நீதிமன்றத்துக்கு அழைத்த நீதிபதி, தனது காருக்கு வழிவிடாததைக் கண்டித்து திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு தண்டனை யாக சீருடையை கழற்றுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பின்னர் பல முறை மன்னிப்பு கேட்ட பிறகு, சீருடையை அணிந்துகொள்ள நீதிபதி அனுமதி  அளித்துள்ளார். சாலை குறுகலாக இருந்ததால் வழிவிட முடிய
வில்லை என குரேலால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆக்ரா காவல் மூத்த கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பப்ளு குமார், அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் கண்காணிப்பாளர் ரவிகுமாருக்கு உத்தரவிட்டார்.

அவர் தயாரித்த அறிக்கையை ஆக்ரா மாவட்ட நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளர், மண்டல நிர்வாக நீதிபதி மற்றும் மாநில காவல் துறை டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோருக்கு எஸ்எஸ்பி அனுப்பி வைத்தார். 
இதையடுத்து, போலீஸ்காரரின் சீருடையை கழட்ட வைத்த நீதிபதியை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.  இதுகுறித்து எஸ்எஸ்பி பப்ளு குமார் கூறும்போது, “குரேலால் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், விருப்ப ஓய்வுபெற விரும்பினார். ஆனால் அவரை சமாதானப்படுத்தி உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x