

புதுடெல்லி
ஆட்சேபகரமான முறையில் பாலியல் ரீதியான கருத்து தெரவித்து சர்ச்சையில் சிக்கிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம்கான் மக்களவையில் இன்று மன்னிப்பு கேட்டார்.
மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத காரணத்தால் அவையை பாஜக எம்.பி. ரமாதேவி நடத்தினார். அப்போது முத்தலாக் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.
மசோதா குறித்து சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் பேசும்போது, மற்ற உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு செய்தனர். அப்போது பேசிய ரமாதேவி, “மற்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் (ஆசம்கான்) பதிலளிக்கவேண்டாம். நீங்கள் உங்கள் கருத்தை அவைக்குத் தெரிவியுங்கள்” என்றார்.
அப்போது ரமாதேவி குறித்து ஒரு ஆட்சேபகரமான கருத்தை ஆசம்கான் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்றத்தில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து பெண் எம்.பி.க்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுக்க்படும் என சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார். இந்தநிலையில் ஆசம்கான் மற்றும் ராமாதேவி ஆகியேரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து சபநாயகர் ஓம்.பிர்லா விசாரணை நடத்தினார். அப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார்.
பின்னர் மக்களவை தொடங்கியது. ஆசம்கான் மன்னிப்பு கோரினார். அவர் பேசுகையில்‘நான் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன். பலமுறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளேன். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளேன். நாடாளுமன்ற விவகார நடைமுறை எனக்கு தெரியும். இருப்பினும் எனது வார்த்தைகள் யார் மனதயும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்’’ எனக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பாஜக எம்.பி. ராமாதேவி ஆசம்கானின் பேச்சு பெண்களை மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் உள்ள ஆண்களையும் வேதனைப்படுத்தியுள்ளது, இதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம்.பிர்லா ஆசம்கான் தனது செயலுக்கான மன்னிப்பு கேட்டுள்ளார், உறுப்பினர்கள் அவையில் பேசும்போது கண்ணியத்துடன் பேச வேண்டும் எனக்கூறினார்.