

புதுடெல்லி
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு (83) வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் மிக உயரிய விருதாக ‘பாரத ரத்னா’ கருதப்படு கிறது. நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த (2012-17) பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதுபோல, சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாமி பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் மரணத்துக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபோல, நானாஜி தேஷ்முக் மற்றும் பூபென் ஹசாரிகா ஆகி யோர் சார்பில் அவர்களது குடும்பத் தினர் விருதை பெற்றுக்கொள் வார்கள் எனத் தெரிகிறது.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பல முறை மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். மத்திய அமைச்சரவையில் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்த நானாஜி தேஷ்முக், ஜே.பி.இயக் கத்தில் முக்கிய பங்கு வகித்துள் ளார். புகழ்பெற்ற பிராந்திய மொழி பாடகர்களில் ஒருவரான பூபென் ஹசாரிகா, அசாமியர்களின் அடையாளமாக விளங்கினார். இவருக்கு ஏற்கெனவே பத்ம, பத்மபூஷண், தாதா சாஹிப் பால்கே உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.