

தங்க பாபா என்று அழைக்கப்படும் சாமியார் 16 கிலோ தங்க நகைகளை அணிந்தபடி உத்தரபிரதேசத்தில் 26-வது ஆண்டாக கன்வர் யாத்திரை மேற்கொண்டார்.
வட மாநிலங்களில் சிரவண மாதத்தில் (தமிழில் ஆடி மாதம்) நடக்கும் கன்வர் யாத்திரையின்போது சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சேகரித்து சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த யாத்திரையில் தங்க பாபா என்று அழைக்கப்படும் சாமியார் சுதீர் மக்கார், உடல் முழுவதும் 16 கிலோ எடையுள்ள நகைகளை அணிந்தபடி இந்த ஆண்டும் கலந்து கொண்டார். கடந்த 26 ஆண்டுகளாக அவர் இந்த யாத்திரையில் உடல் முழுவதும் நகைகளை அணிந்தபடி கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இப்படி நகைகளை அணிந்து கொண்டிருப்பதாலேயே அவரது சீடர்களால் தங்க பாபா என்று அழைக்கப்படுகிறார்.
கைகளில் தங்க காப்புகள், பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்தில் தங்க சங்கிலிகள், பதக்கம் போன்ற பெரிய தங்க டாலர்களுடன் தனது காரின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் மக்களை பார்த்து கையசைத்துக் கொண்டே செல்வது தங்க பாபாவின் ஸ்டைல். தன்னுடன் சுமார் 300 பக்தர்களையும் வாகனங்களில் யாத்திரைக்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கான யாத்திரை செலவுகளையும் தங்க பாபாவே ஏற்றுக் கொள்கிறார். கடந்த ஆண்டு யாத்திரையின்போது 20 கிலோ எடையுள்ள நகைகளை அணிந்து வந்த தங்க பாபா, உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த ஆண்டு 16 கிலோ நகைகளை மட்டுமே அணிந்து வந்தார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு தங்க பாபா அளித்த பேட்டியில், ‘‘கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து உ.பி.யின் மீரட்டுக்கு கன்வர் யாத்திரை புறப்பட்டேன். உடல் நிலை காரணமாக இந்த ஆண்டு யாத்திரை செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால், பக்தர்களின் வற்புறுத்தல் காரணமாக யாத்திரை மேற்கொண்டேன். இதோடு, 26 ஆண்டுகளாக கன்வர் யாத்திரை மேற்கொண்டுள்ளேன். ஆரம்பத்தில் 2 மற்றும் 3 கிராம் எடையுள்ள நகைகளை அணிந்தேன். இன்று கிலோ கணக்கில் அணிகிறேன். வியாபாரம் மூலம் எனக்கு கிடைத்த எனது சொந்தப் பணத்தில் இருந்து இந்த நகைகளை வாங்கி அணிந்துள்ளேன்’’ என்றார். இளமையில் வறுமையில் வாடிய தங்க பாபா, பின்னர் ஜவுளி வியாபாரம் மூலம் பெரும் பணக்காரர் ஆனார். உ.பி.யில் காசியாபாத்தில் அவருக்கு பல கோடி மதிப்புள்ள வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.