

பெங்களூரு,
கர்நாடக சட்டப்பேரவையில் சித்தாமையாதான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார், என் மகன் இருக்கமாட்டார், காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மைசூர் மண்டலத்தில் எதிர்துருவங்களாக இருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தன.
ஆனால், இந்த கூட்டணி அமைந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது, கட்சிக்குள் பல குழப்பம்நேரிட்டது. மக்களவைத் தேர்தலில் இந்தகூட்டணி படுதோல்வி அடைந்து தலா ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றின.
கட்சிக்குள் குழப்பம் உச்ச கட்டத்தை எட்டியவுடன், ஜேடிஎஸ், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர், சுயேட்சை எம்எல்ஏக்களும் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு 105 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் 99 உறுப்பினர்கள் இருந்ததால், முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்தார்.
இதனால், இந்த சூழலுக்குப்பின் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப்போவதாக குமாரசாமி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால்,அதை குமாரசாமி, தேவகவுடா மறுத்தனர்.
இந்த சூழலில் 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார். 4-வது முறையாக முதல்வராக பதவி ஏற்ற பாஜக தலைவர் எடியூரப்பா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை கோரவுள்ளார்.
எதிர்காலத்திலும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி தொடருமா, எதிர்க்கட்சித் தலைவராக யார் இருப்பார்கள் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அவர் அளித்த பதிலில் கூறியது:
கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையாதான் இருப்பார், என் மகன் குமாரசாமி எங்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக மட்டுமே செயல்படுவார். எதிர்காலத்திலும் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி தொடருவது குறித்து காங்கிரஸ் மேலிடம், கர்நாடக தலைமையின் அறிவுரையின் அடிப்படையில் முடிவு எடுக்கும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி அறிவுரையின் பேரில்தான் என் மகன் குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். எதிர்காலத்தில் கூட்டணி தொடருமா என்பது குறித்து என்னால் கூற முடியாது. இன்னும் எடியூரப்பா அரசுக்கு 3ஆண்டுகள்8 மாதங்கள் இருக்கிறது அந்த காலம் முழுவதும் சித்தராமையாதான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் " எனத் தெரிவித்தனர்.
பிடிஐ