

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரும், சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முறையிட முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி கடந்த செவ்வாய்கிழமை (99 உறுப்பினர்கள்) பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 23-ம்தேதி ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக இருந்த குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் கொறடாக்கள் தங்கள் எம்எல்ஏக்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
ஆனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினர். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் இந்த எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சபாநாயகர் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். முதல் கட்டமாக, கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கேஆர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் 105 எம்எல்ஏக்களுடன் இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, ஆளுநர் வாஜூபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி, 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா இருக்கிறார்.
இந்த சூழலில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் கொறாடா பிறப்பித்த உத்தரவை மீறியதையடுத்து, இரு கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்களை 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் 2023-ம் ஆண்டுவரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக ஜேடிஎஸ், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரும் உச்ச நீதிமன்றத்தை நாட இருக்கின்றனர்.
இதுகுறித்து ஜேடிஎஸ் எம்எல்ஏ ஏ.ஹெச். விஸ்வநாத் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், " சபாநாயகர் ரமேஷ் குமாரின் உத்தரவு சட்டத்துக்கு விரோதமானது. கொறடா மட்டும்தானே உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர்களை சட்டப்பேரவைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்த முடியாது. சபாநாயகரும் எம்எல்ஏதான் என்பதை முதலி்ல் உணர வேண்டும். இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து மக்களுக்கான அரசாகவாக இருந்தது, மாநிலத்தில் நிலவிய அரசியல்சூழலை இந்த முடிவு எடுக்க காரணமாக இருந்தது. நாங்கள் சட்டப்பேரவைத் தலைவர் முன் ஆஜராக போதுமான அளவு அவகாசம் கேட்டிருந்தோம்.
சட்டப்பேரவையில் பங்கேற்கவில்லை என்பதற்காக 20 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது எந்த விதத்தில் செல்லும். இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் கோவிந்த் கர்ஜோல் கூறுகையில், " சபாநாயகர் உத்தரவு மோசமானது. அரசியல் கட்சிகளின் கடும் அழுத்தத்தால் இந்த முடிவை எடுத்துள்ளார், எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை அவர் பரிசீலிக்கவில்லை. நாட்டில் உள்ள எந்த நீதிமன்றமும் சபாநாயகர் முடிவை ஏற்காது.எந்த எம்எல்ஏவும் தனது ராஜினாமாவை தாக்கல் செய்ய உரிமை உண்டு, அதை மறுக்க முடியாது. இது உள்நோக்கில் செய்யப்பட்டுள்ளது, இயற்கை நீதியின்கொள்கையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை " எனத் தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ ஏ.எஸ்.நடஹல்லி கூறுகையில், " எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் உண்மையானதா, அல்லது தாமாக முன்வந்து கடிதம் அளித்தார்களா என்பதை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்திலும் எம்எல்ஏக்கள் ராஜினாமாகடிதத்தின் நகலை அளித்துள்ளார்கள். அப்படியென்றால், ராஜினாமா உண்மையானதா அல்லது தாமாக அளித்ததா என்பதை சாபாநாயகர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்தானே. சபாநாயகர் எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது சட்டவிரோதம், உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவு ஒருமணிநேரம்கூட நிலைக்காது " எனத் தெரிவித்தார்