வயிற்று வலிக்கு இதுவா மருந்து? - ஒரு பெண் நோயாளிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் தர்மசங்கடமும்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

நோய்க்குரிய மருந்தை பரிந்துரை செய்யாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் மருந்து, மாத்திரைகளை வணிக ரீதியான நலன்களுக்காக பரிந்துரைக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதே போல் தவறுதலாக வேறொரு நோய்க்கான மருந்தை இன்னொரு நோய்க்கு கொடுக்கும் மருத்துவர்கள் என்று அவர்கள் பலவகை. 

ஆனால் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்திருப்பதோ மிகவும் விசித்திரமானது, ஆச்சரியமேற்படுத்துவது, இந்த மாதிரியான குழப்பம் ஒரு மருத்துவருக்கு எப்படி வரமுடியும் என்ற கேள்வி எழுந்து அந்த மருத்துவர் மீது தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதோடு மட்டுமல்லாமல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ. குணால் சாரங்கி இதனை சட்டப்பேரவை வரை எடுத்துச் சென்று கேள்வி எழுப்பும் நிலையும் ஏற்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள காட்ஷிலா அரசு மருத்துவமனைக்கு  கிளாஸ் 4 பிரிவைச் சேர்ந்த பெண் ஊழியர்  ஒருவர் வயிற்று வலி என்று சிகிச்சைக்காக சென்றார். அஷ்ரப் பாதர் என்ற அந்த மருத்துவர் வயிற்று வலிக்கு ‘மருந்து’ என்று  ஒரு பெயரை பரிந்துரைச் சீட்டில் எழுதிக் கொடுத்தார். 

மெடிக்கல் ஷாப்புக்கு அந்த மருந்துச்சீட்டை எடுத்துக் கொண்டு சென்ற போது மருந்துக் கடைக்காரர் அதில் எழுதியிருக்கும் ‘மருந்தின்’ பெயரைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார். 

அதாவது வயிற்று வலி என்று சென்ற பெண்ணுக்கு அந்த மருத்துவர் எழுதிய ‘மருந்து என்ன தெரியுமா?   ‘ஆணுறை’ (condom). இதை அந்தப் பெண்ணிடம் தெரிவிக்க அவருக்கு கடும் தர்மசங்கடமும் அதிர்ச்சியும் ஏற்பட மூத்த  மருத்துவர்களிடம் புகார் செய்துள்ளார். 

இதனையடுத்து ஒரு மனநல நிபுணர் உட்பட மருத்துவக் குழு ஒன்றை அமைத்து அந்த மருத்துவரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காட்ஷில மருத்துவமனையின் அதிகாரி ஷங்கர் துடு கூறும்போது, “பெண்ணின் புகாரை அடுத்து ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

ஆனால், தான் அப்படி எழுதவில்லை என்று சம்பந்தப்பட்ட டாக்டர் மறுத்துள்ளாராம். 

-ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in