

மக்களவையில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி ஆஸம் கான் பாஜக எம்பி ரமா தேவியிடம் தவறாக பேசியதற்கு உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புஉருவாகியுள்ளது.
கடந்த வியாழன் அன்று மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தின்போது சபாநாயகர் இருக்கையில் பொறுப்பில் இருந்த ரமாதேவி எம்.பியிடம் ஆஸம்கான் எம்.பி தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே ''இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்'' என்று ரமாதேவி குறிப்பிட்டார். பெண் எம்.பிக்கள் உள்ளிட்ட பலரும் ஆஸம்கானை அப்போதே கண்டித்தனர்.
அப்போதே தனது எதிர்ப்பினை பதிவு செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ''பொது இடத்தில் இப்படி பேசியிருந்தால் இந்நேரம் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பார். அதுவும் மக்களவையில் ஒரு பெண்ணை எப்படி இப்படி பேசமுடிகிறது. ஆஸம் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
அப்பிரச்சினை தற்போது வலுக்கத் தொடங்கியுள்ளது. ஆஸம்கானின் பேச்சுக்கு அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலேயே வலுவான கண்டனங்கள் எழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பெண்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் பாஜக இதைப் போன்ற தருணங்களை தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொள்ளும் ஒரு முனைப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
ஷாயிஸ்தா ஆம்பெர்
அகில இந்திய முஸ்லிம் பெண்களுக்கான பணியாளர் சட்ட வாரியத்தின் தலைவர் ஷாயிஸ்தா ஆம்பெர் அவருக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஷாயிஸ்தா ஆம்பேர் வெளியிட்டுள்ள கருத்தில் தெரிவிள்ளதவாது:
''தான் எந்தமாதிரியான இருக்கையில் அமர்ந்துகொண்டு பேசுகிறோம் என்பதை அவர் முதலில் உணர்ந்திருக்க வேண்டும். ராமாதேவியும் ஒரு சாதாரண பெண்ணோ சகோதரியா அல்ல. நாடாளுமன்றத்தில் உள்ள பெண்களே இப்படிப்பட்ட தாக்குதலுக்கு ஆளானால் வெளியில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் அளிக்க முடியும்? இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக அவருக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாள் நினைக்கிறேன்''
எம்எல்ஏ சுஷ்மா பட்டேல்
சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சுஷ்மா படேல் தெரிவிக்கையில், ''ஆஸம் கான் பேசும்போது பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் கண்ணிய மற்றும் கவுரவக் குறைவானவையாகும். பெண்களைப் புண்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் அனைத்து பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர்
தன் பெயரை வெளியிட விரும்பாத காங்கிரஸைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர் கூறுகையில், இப்படி நடந்திருக்கக் கூடாது. ஆஸம் கான் ஒரு மூத்த தலைவர், தான் என்ன பேசுகிறோம், எங்கு பேசுகிறோம் என்பதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
அபர்ணா யாதவ்
சமாஜ்வாடி கட்சியின் மூத்தத் தலைவரான முலாயம் சிங் யாதவ்வின் இளைய மகளும் எம்எல்ஏவுமான அபர்னா யாதவ் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், "அவர் ஏன் அப்படி பேசினார் என்று எனக்குத் தெரியவில்லை. பெரிய அளவுக்கு ஆத்திரமூட்டும் பேச்சு இது இல்லை என்றாலும் நாடாளுமன்றம் எப்படிப்பட்ட நடத்தையை அவரிடம் எதிர்பார்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இத்தனைக்கும் அவர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நல்ல பேச்சாளர் ஆவார். எவ்வாறாயினும் அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்பதுதான் சரி.'' என்றார்.
சங்கீத் சோம்
பாஜகவின் முக்கிய பிரமுகரும் எம்எல்ஏமான சங்கீத் சோம் தெரிவிக்கையில், ஆஸம்கான் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு, வரும் ஜூலை 29 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்பாக நாடாளுமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்படுவார். அவர் அப்படி மன்னிப்பு கேட்கத் தவறும் பட்சத்தில் அவர்மீது முன்னுதாரணமாக பின்பற்றத்தக்க நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக எனக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
பாஜக சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்
முன்னால் சமாஜ்வாதி எம்எல்ஏ ஒருவர் ''அவர் நகைச்சுவை பேசக்கூடியவர். அவரது பேச்சுமுறையை பலருக்கும் தெரியும். இங்கே உள்ளவர்கள் அவர் சொல்வதை தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். இந்த மாதிரி பிரச்சினைகளை பாஜக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதோடு, பாஜக அவரை தாக்க காத்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.