

ஆர்.ஷபிமுன்னா
உத்தரபிரதேசத்தின் மதரஸாவில் முஸ்லிம் குழந்தைகள் அன் றாடப் பிரார்த்தனையில் கலீமா வுடன்,சேர்த்து காயத்ரி மந்திரத் தையும் கூறுகின்றனர். இதனால், அந்த மதரஸா மதநல்லிணக்கத் துக்கு சான்றாக விளங்குவதாகப் புகழப்படுகிறது.
உ.பி.யின் மேற்குபகுதியில் உள்ள சம்பலில் முஸ்லிம் குழந் தைகள் பயிலும் மதரஸாவாக இருப்பது, ‘மவுலானா அப்துல் ஜோஹர் அலி பப்ளிக் ஸ்கூல்’. இங்கு சுமார் 170 முஸ்லிம் குழந் தைகள் பயில்கின்றனர். இது போல், உ.பி. மதரஸாக்களில் அன் றாடம் காலை பிரார்த்தனை நேரத் தில் முஸ்லிம்களின் கலீமா, குழந்தைகளால் கூறப்படுகிறது. ஆனால், சம்பலின் மதரஸாவில் கலீமாவுடன் சேர்த்து, இந்துக் களின் காயத்ரி மந்திரமும் கூற வைக்கப்படுகிறது. அத்துடன், கடைசியில் வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய், இந்துஸ்தான் ஜிந்தா பாத் மற்றும் தேஷ் கீ அமர் ஷஹீதோங்கி ஜெய் (நம் நாட்டுக் காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் வாழ்க) ஆகிய கோஷங்களும் எழுப்பப்படுகின்றன.
அல்லாவை தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது எனும் தமது கொள்கையால் முஸ்லிம்கள் வந்தே மாதரம் கோஷத்தை இடுவதற்கு உ.பி.யில் எதிர்ப்புகள் எழுவது உண்டு. இந்த வழக்கம் சம்பலின் மதரஸா பள்ளி துவங்கிய 2012 முதல் இருந்து வருகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சம்பல் மதரஸாவின் முதல்வரான பெரோஸ் கான் கூறும்போது, ‘நாட்டில் மதநல் லிணக்கத்தை வளர்க்க வேண்டும். மற்ற மதங்களின் மந்திரங்களை யும் குழந்தைகளுக்கு அன்றாடம் இங்கு போதிக்கிறோம். இதனால், அவர்களிடம் சகிப்புத்தன்மை வளரும் என நம்புகிறோம். துவக் கத்தில் இருந்த எதிர்ப்பு அதன் நோக்கம் புரிந்ததால் தற்போது ஆதரவாக மாறி விட்டது’ என்றார்.
மேலும், இது உ.பி.யில் சம்ஸ்கிருத மொழியை பாடமாகக் கற்றுக்கொடுக்கும் சில மதரஸாக் களில் ஒன்றாகவும் அமைந்துள் ளது. முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனுடன், அரபி மற்றும் உரு துவும் இங்கு பயிற்றுவிக்கப் படுகிறது. எனினும், ஆங்கிலம், கம்ப்யூட்டர், அறிவியல், கணிதம் என நவீனக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சம்பலின் பல பகுதிகளில் பசுப் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை யும் இந்த மதரஸா ஏற்படுத்தி வருகிறது.
உ.பி.யில் 2017-ல் அமைந்த பாஜக ஆட்சிக்கு பின் உ.பி.யின் அரசு உதவிபெறும் மதரஸாக் களில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்கள் கொண்டாடு வதுடன் தேசிய கீதமும் பாட வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்தமையால் உ.பி. முஸ்லிம்கள் இடையே சர்ச்சைகளும் கிளம்பின. இந்த சூழலில் சம்பலின் மதரஸா உ.பி.யில் மதநல்லிணக்க சான்றாக விளங்குவதாகப் பாராட்டப்பட்டு வருகிறது