Published : 28 Jul 2019 09:23 AM
Last Updated : 28 Jul 2019 09:23 AM

பெட்ரோல், டீசலில் இயங்கும்  கார், பைக் பதிவு கட்டணம் பல மடங்கு உயருகிறது: மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்

பழைய வாகனங்களை அழிக்க மையங்கள் அமைக்கவும் முடிவு

பெட்ரோல், டீசலில் இயங்கும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கான பதிவு மற் றும் புதுப்பிப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டைக் குறைத்து பேட்டரியில் இயங்கும் மின்சார வாக னங்களை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை புதிய வரைவை தயாரித்துள்ளது. அதில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக் கப்பட்டுள்ளன. குறிப்பாக பெட்ரோல், டீசலில் இயங்கும் கார், பைக்குகளின் பதிவு, புதுப்பிப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக் கிறது.

இருசக்கர வாகனத்துக்கு தற்போது ரூ.50 பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.1,000 ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல மூன்று சக்கர வாகனங் களுக்கு ரூ.300-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் கார், ஜீப் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் நான்கு சக்கர சரக்கு வாகனங்களுக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.10,000 ஆகவும் நடுத்தர, கனரக சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.20,000 ஆகவும் பதிவு கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான புதுப்பிப்பு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.2,000 ஆகவும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.300-ல் இருந்து ரூ.10,000 ஆகவும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.15,000 ஆகவும் நான்கு சக்கர சரக்கு வாகனங்களுக்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.20,000 ஆகவும், நடுத்தர, கனரக பயணிகள், சரக்கு வாகனங்களுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.40,000 ஆகவும் புதுப்பிப்பு கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல், டீசல் கார், பைக்குகளை இறக்குமதி செய்து பதிவு செய்தால் தற்போது ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.20,000 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சாலை போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற் காக மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் பெட் ரோல், டீசல் கார், பைக்குகளுக்கான பதிவு கட்டணம் 400 மடங்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

பழைய பெட்ரோல், டீசல்கார்களுக் கான புதுப்பிப்பு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்த பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம், வாகனங்களின் உரிமையாளர்கள் பழைய வாகனத்தை கைவிட்டு புதிதாக மின்சார வாகனங்களை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

15 ஆண்டுகளான வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தகுதிச் சான்று (எப்.சி.) பெற வேண்டும். இதனை 6 மாதங்களாகக் குறைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

பழைய வாகனங்களை அழிக்க நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் வாகனங்களை அழித்துவிட்டு அதற்கான சான்றிதழை பெற்று வருபவர்கள், புதிய வாகனத்துக்கு பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதுபோல பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரி வித்தார்.

மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 12-ல் இருந்து 5% ஆக குறைப்பு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 36-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை:

மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில், அவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 12-ல் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதியை அதிகரிக்கும் பொருட்டு, அவ்வாகனங்களுக்கான சார்ஜர் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

மேலும் பயணிகள் போக்குவரத்துக்காக தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு முற்றிலும் வரி விலக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு வரும் ஆகஸ்ட் 1 தேதி முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, மின்சார வாகனக் கடன் பெறுவோருக்கு அவர்கள் செலுத்தும் வட்டி மீது வருமான வரிச் சலுகை வழங்கப்படும் என நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, அதன் மீதான வரி விகிதம் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாங்கத்தக்க விலையில் மின்சார வாகனங்களின் உற்பத்தி இருப்பதற்காக அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. இந்த வரிக் குறைப்பினால் மின்சார பேட்டரியில் இயங்கும் கார்கள் உட்பட 4 சக்கர வாகனங்களை தயாரித்து வரும் ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் பயன் அடையும்.

மேலும் இருசக்கர மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களான ஹீரோ எலக்ட்ரிக், ரிவோல்ட், ஏதர் எனர்ஜி, கைனெடிக் கிரீன், டார்க் மோட்டார்ஸ், 22 கிம்கோ மற்றும் லாக் 9 மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்கள் பயனடையும் என்று தெரிகிறது.

இதுகுறித்து இஒய் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் ஜெயின் கூறும்போது, “பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இப்போது மின்சார வாகனங்களுக்கான வரி மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால் அவ்வாகன உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.

விற்பனை அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் ஆண்டுக்கு 30 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. அவற்றில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 15,000 ஆக உள்ளது. வரிகுறைப்பு உட்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x