

ஜம்மு
காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் 36 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய பஹல்காம் வழியிலும் கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. பால்தால் வழியிலும் யாத்திரை நடைபெறுகிறது.
ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை, 46 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 2,85,381 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜம்மு அருகே கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தைக் கடக்க முயன்ற பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. பின்னர் வீரர்கள் வந்து அந்தப் பேருந்தை மீட்டனர்.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமர்நாத் யாத்திரையைத் தற்காலிகமாக அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
காஷ்மீரில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சீரடைந்ததும் வழக்கம்போல் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.