மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்: பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு

மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்: பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு
Updated on
1 min read

மும்பை

மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயிலில் தவித்த பயணிகள் அனைவரையும் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸார் பத்திரமாக மீட்டனர். 

மும்பையில் நேற்று முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், கோலப்பூர் நோக்கி செல்ல வேண்டிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை அருகே இன்று காலை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. 

மும்பை அருகே பாதல்பூர் - வாங்கினி ரயில் நிலையத்துக்கு இடையே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் சூழ்ந்தது. வெள்ள நீர் அந்த பகுதியை சூழ்ந்ததால் ரயிலை இயக்க முடியவில்லை.

அந்த ரயிலில் 700க்கும் அதிகமான  பயணிகள் இருந்தனர்.  தண்டவாளத்தை தாண்டி தண்ணீர் ஓடுடியதால்  ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தில் சிக்கி ரயிலுக்குள் பல மணிநேரமாக பயணிகள் தவித்தனர். சில பயணிகள் ரயிலில் இருந்து குதித்து வெளியேற முற்பட்டனர். 

ஆனால் அவர்களை வெளியேற வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். வெள்ள நீர் அதிகமாக இருப்பதால் ஆபத்து ஏற்படும் என எச்சரித்தனர். அவர்களை மீட்பதற்காக படகுகள் மற்றம் மீட்பு பொருட்களுடன் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்தனர். 

ரயிலில் இருந்த பயணிகள் அனைவரம் ரப்பர் படகுகளில் ஏற்றப்பட்டு பத்திரமாக கொண்டு வரப்பட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். 

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் கோலாப்பூர் வரை செல்லும் என்பதால் மாற்று ரயில் இயக்கப்படும் வரை அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in