

பெங்களூரு,
கர்நாடக சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கே.ஆர். ரமேஷ் குமார் தாமாக முன்வந்து பதவி விலகாவிட்டால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து நீக்க பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி கடந்த செவ்வாய்கிழமை (99 உறுப்பினர்கள்) பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.
சட்டப்பேரவையில் 105 எம்எல்ஏக்களுடன் இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, ஆளுநர் வாஜூபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி, நேற்று மாலை 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா இருக்கிறார்.
225 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். சமீபத்தில் 3 எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம்விட்டதால் 222 ஆகக் குறைந்தது. இதற்கிடையே 13 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான ராஜினாமா கடிதத்தின் மீது இதுவரை சபாநாயகர் ரமேஷ் குமார் எந்தவிதமான முடிவும் இதுவரை எடுக்கவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் எடுக்கும் முடிவைப் பொருத்து மற்ற நடவடிக்கைகள் இருக்கும்.
இப்போதுள்ளநிலையில் அவையில் 209 உறுப்பினர்கள் உள்ளனர். அவையில் 105 உறுப்பினர்கள் இருந்தாலே அதுபெரும்பான்மைதான். எடியூரப்பாவுக்கு ஆதரவாக 105 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 63 எம்எல்ஏக்கள் ஆதரவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருக்கிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபித்தபின் சட்டப்பேரவையில் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பதவியிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சபாநாயகர் ரமேஷ் குமாரிடமும் பாஜக சார்பில் ரகசியமாகக் கூறிபதவி விலகவும் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் அதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், " பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தபின், நிதி மசோதாவை நிறைவேற்றுவதுதான் முதல் குறிக்கோள். அதன்பின், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்.
அதற்குள் சபாநாயாகர் தாமாக பதவி விலகிவிடுவார் என நம்புகிறோம். இல்லாவிட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை நீக்குவோம், சபாநாயகர் என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் " எனத் தெரிவித்தார்.
பிடிஐ