மும்பையில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்: வெளியே வர முடியாமல் 700 பயணிகள் தவிப்பு

மும்பையில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்: வெளியே வர முடியாமல் 700 பயணிகள் தவிப்பு
Updated on
2 min read

மும்பை

மும்பையில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சிக்கிக் கொண்டது. 700க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. 

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இங்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரவுமுழுவதும் அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

புறநகர் பகுதியான தானேயி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் மழையால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. மும்பை அருகே பாதல்பூர் - வாங்கினி ரயில் நிலையத்துக்கு இடையே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் சூழ்ந்தது. வெள்ள நீர் அந்த பகுதியை சூழ்ந்ததால் ரயிலை இயக்க முடியவில்லை.

வெள்ளத்தில் குதித்த பயணிகள்

அந்த ரயிலில் 700 பயணிகள் உள்ளனர். தண்டவாளத்தை தாண்டி தண்ணீர் ஓடுவதால் ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் சிக்கி ரயிலுக்குள் பல மணிநேரமாக பயணிகள் தவித்து வருகின்றனர். சில பயணிகள் ரயிலில் இருந்து குதித்து வெளியேற முற்பட்டனர். 

ஆனால் அவர்களை வெளியேற வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வெள்ள நீர் அதிகமாக இருப்பதால் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ளனர். அவர்களை மீட்பதற்காக படகுகள் மற்றம் மீட்பு பொருட்களுடன் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்துள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மத்திய ரிசர்வ் படை போலீஸாரும் அங்கு விரைந்துள்ளனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in