

டெல்லி ஐஐடி வளாகத்திலுள்ள ஊழியர்கள் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். உடல்களை மீட்ட போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஐஐடியில் பரிசோதனைக் கூட உதவியாளராகப் பணிப்புரிந்துவந்தார் குல்ஷன் தாஸ். இவர் மனைவி சுனிதா மற்றும் தாயார் காம்தாவுடன் ஐஐடி வளாகத்தினுள் இருக்கும் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் குல்ஷன் தாஸ் மற்றும் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை என போலீஸாருக்கு உறவினர்கள் சிலர் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து டெல்லி ஐஐடி வளாகத்திற்குச் சென்ற போலீஸார் குல்ஷன் தாஸ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டிலிருந்த 3 அறைகளில் 3 பேரும் மின்விசிறியில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர்.
உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். வீட்டிலிருந்து தற்கொலைக் கடிதமோ குறிப்போ எதுவும் சிக்கவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் குல்ஷன் - சுனிதா திருமணம் நடந்துள்ளது. குல்ஷனின் சொந்த ஊர் ஹரியாணா. அங்குள்ள குல்ஷனின் உறவினர்களுக்கு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.
மர்ம மரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.