டீஸ்டா முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது சிபிஐ நீதிமன்றம்

டீஸ்டா முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது சிபிஐ நீதிமன்றம்
Updated on
1 min read

வெளிநாட்டு நன்கொடையை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட், அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

செடல்வாட், அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் மற்றும் குலாம் முகம்மது பெஷிமாம் ஆகிய மூவரும் மும்பை சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் (எஸ்சிபிபிஎல்) என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.

இவர்கள் மூவரும் குற்றச் சதியில் ஈடுபட்டதாகவும், தங்களின் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நன்கொடை பெற்றதாகவும் கடந்த 8-ம் தேதி (ஜூலை 8) சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறி வெளிநாட்டு நிதியை எஸ்சிபிபிஎல் நிறுவனத்துக்கு திருப்பி விட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த 14-ம் தேதி மும்பையில் உள்ள எஸ்சிபிபிஎஸ் அலுவலக வளாகம், செடால்வட், குலாம் முகமது ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், முன் ஜாமீன் கோரி டீஸ்டா மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தார். இந்நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

'அதிர்ச்சியளிக்கும் உத்தரவு'

நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக தெரிவித்தபோது நீதிமன்றத்தில் பேசிய டீஸ்டா, "இந்த உத்தரவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனக்கு தீங்கிழைக்கப்பட்டதாக உணர்கிறேன். இது ஒரு சிறு குற்ற வழக்கு. இதைவிட முக்கிய வழக்குகளில்கூட எங்களுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பை எனக்கு ஏற்புடையதல்ல. இத்தகைய தீர்ப்பு மூலம் அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களை அடக்குமுறை செய்ய முயற்சி செய்யப்படுவதாக நானும் எனது ஆதரவாளர்களும் உணர்கிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in