9 ஆண்டுகளுக்கு முந்தைய எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு

9 ஆண்டுகளுக்கு முந்தைய எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு
Updated on
2 min read

புதுடெல்லி,

9 ஆண்டுகளுக்கு முன் பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தொண்டுநிறுவனமான சமாஜ் பரிவரித்தனா சமுதாய அமைப்பு இருவர் மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

1962-ம் ஆண்டு பி.கே. ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 5.11 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வாங்கிய வழக்கு எடியூரப்பா, சிவக்குமார் மீது இருக்கிறது. இதில் 4.20 ஏக்கர் நிலம் கர்நாடக நிலச்சட்டத்தின் கீழ் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்ட இடமாகும். 

ஆனால் கடந்த 2003-ம் ஆண்டு  டி.கே. சிவக்குமார் நகர மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்ரீனிவாசனிடம் இருந்து டிசம்பர் 18-ம் தேதி அந்த இடத்தை ரூ.1.60 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார். அந்த இடத்தை விவசாயப் பகுதியில் இருந்து தொழில்துறை பகுதியாக சிவக்குமார் மாற்றியுள்ளார்.

அந்த நிலம் விற்பனை செய்யவும், வாங்கவும் தடை செய்யப்பட்டது எனத் தெரிந்தும் சிவக்குமார் வாங்கியுள்ளார். அதன்பின் சிவக்குமார் சட்டவிரோதமாக அந்த நிலத்தை வாங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.ஆனால், அதிகாரிகள் துணையுடன் அந்த இடத்தை குடியிருப்பு பகுதியாக சிவக்குமார் மாற்றியுள்ளார். 
இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக சிவக்குமார் இருந்தார். தான் வாங்கிய நிலம் விற்கவும், வாங்கவும் தடை செய்யப்பட்ட பகுதி எனும் கட்டுப்பாட்டை திரும்பப் பெற சிவக்குமார் எடியூரப்பாவை இணங்கச் செய்தார். 

இதுதொடர்பான உண்மை வெளியாகி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சமாஜ் பரிவரித்தனா சமுதாய அமைப்பு மேல்முறையீடு செய்திருந்தது. 

அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனக் கோரி சமாஜ் பரிவரித்தனா சமுதாய அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். எடியூரப்பா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி ஆஜரானார். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் பிராசாந்த் பூஷன் வாதிடுகையில், " சமாஜ் பரிவரித்தனா சமுதாய அமைப்பு தொடுத்த எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மீதான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும். எடியூரப்பா இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார் " எனத் தெரிவித்தார். 

அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, " எந்த பெயரின் அடிப்படையிலோ, அல்லது பதவியின் அடிப்படையிலோ என்னை யாரும் பாதிக்க முடியாது. இந்த வழக்கு அடுத்த 2 வாரங்களுக்கு பின் விசாரணைக்கு எடுக்கிறோம். இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறக்க முடியாது " எனத் தெரிவித்தார்.
ஆனால், எடியூரப்பா சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் முகல் ரோஹத்கி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க எதிர்ப்புத் தெரிவித்தார், கடந்த 2015-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை  தேவையில்லாமல் தொண்டுநிறுவனம் மீண்டும் விசாரிக்க முயல்கிறது என்று குற்றம்சாட்டினார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in