

புதுடெல்லி
2-வது முறையாக பதவிஏற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் 50 நாட்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதத்தோடு தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாக வென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு பதவி ஏற்றது. பிரதமர் மோடி தலைமையில் உருவான அரசு முதல் 50 நாட்களை கடந்த 3 நாட்களுக்கு முன் நிறைவு செய்தது.
முதல் 50 நாட்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்த சாதனைகள் குறித்து பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா, இன்று டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறையாக வெற்றிகரமாக பதவி ஏற்ற பாஜக அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை முதல் 50 நாட்களில் எடுத்திருக்கிறது.
பிரதமர் மோடி அரசின் முதல் 100 நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்க இருந்தோம், இப்போது, 50 நாட்களிலேயே அதை தொடங்கிவிட்டோம்.
2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழஹ்கும் திட்டத்துக்கான பணிகளை பிரதமர் மோடி அரசு தொடங்கிவிட்டது.
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தியும், பிரதான சாலைகளுடன், கிராமச்சாலைகளை இணைக்கும் பணியையும் தொடங்கிவிட்டது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை உயர்ததும் நோக்கில் பல முன்னுதாரணமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
குறிப்பாக சிறு, குறு வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் முடிவு, துணை ராணுவப்படையில் பணியாற்றும்போது வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை அளித்தல் போன்ற மகத்தான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நட்டா பேசினார்.
பிடிஐ