Published : 26 Jul 2019 03:38 PM
Last Updated : 26 Jul 2019 03:38 PM

ஐபிஎல் போட்டி வீரர்கள் ஏலத்துக்கு எதிராக வழக்கு: மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த டெல்லி உயர் நீதிமன்றம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி,
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் ஏலம் விடப்படுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரை கண்டித்த டெல்லி உயர் நீதிமன்றம், விளம்பரத்துக்காக இதுபோன்று வழக்கு தொடரக்கூடாது எனக் கூறி ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சுதிர் சர்மா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், அந்த மனுவில், "  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், புரோ கபடி போட்டிகளில் வீரர்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறார்கள். இது அடிப்படை உரிமைகள் மீறலாகும்.

மனிதர்களை விலை பேசி ஏலம் விடும் இதுபோன்ற செயலை முறைப்படுத்தவோ, தடை செய்யவோ, தடுத்து நிறுத்தவோ தவறிவிட்டோம். இதுபோன்று வீரர்களை ஏலம் விடும் முறையால், ஊழல், தனக்கு தேவைப்பட்டவருக்கு வாய்ப்பு அளித்தல், கடத்தல் போன்றவை அதிகரிக்கும். வெளிப்படையாக நடக்கும் இந்த ஏலத்தை அனைத்து ஊடகங்களும் செய்தியாக்குகின்றன 

இந்த ஏலம்விடும் நிகழ்ச்சியை அரசு நிறுவனங்கள், மத்திய விசாரணை அமைப்புகள், அமைச்சகங்கள், பிசிசிஐ ஆகியவை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றன. பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த ஏலத்தின் மூலம் வீரர்களை விலைக்கு வாங்குகிறார்கள்.

பிசிசிஐ அமைப்பு, ஐபிஎல் அமைப்பு ஏலத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாகப் பெறுகின்றன. சட்டவிரோதமாக நடக்கும் இதுபோன்ற மனித விற்பனையை தடை செய்ய வேண்டும், வீரர்களை ஏலம் விடும் இந்த செயலை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் படேல், சி. ஹரிசங்கர் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வாதிடுகையில், வீரர்களை விற்பனை செய்வது, ஏலமிடுவது அனுமதிக்கப்படக் கூடாது, இது தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மனிதர்களை விற்கலாம், வாங்கலாம் என்று சட்டத்தில் கூறப்படவில்லை என வாதிட்டார்.

வாதத்தைக் கேட்டபின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், " மனிதர்களை விற்பனை செய்வதும், வாங்குவதும் தடை செய்யும் நோக்கத்திலும், கேள்விக்குள்ளாக்கும் நோக்கிலும் இந்த பொதுநல மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. இது விளம்பரத்துக்காக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் மட்டும் வீரர்கள் ஏலம் விடப்படவில்லை, கபடி உள்ளிட்ட பல போட்டிகளில் வீரர்கள் ஏலம் நடக்கிறது. தேசிய வீரர்களை விளையாட்டுகளில் ஏலம் விடுவது மரியாதைக்குறைவானது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். பொதுநல மனு என்பது மக்களுக்கு நலன் அளிக்கும் வகையில் தாக்கல் செய்யப் படவேண்டும் இதுபோன்று குறிப்பிட்டவர்களின் பெயரைக் கூறி விளம்பரத்துக்காக தாக்கல் செய்யக் கூடாது.

இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்வதோடு, இந்த மனுவைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். அந்த பணத்தை அடுத்த 6 வாரங்களுக்குள் சிறுவர் நீதிமன்ற நிதிக்காக அளிக்க வேண்டும். இந்த பணம் குழந்தைகளின் நலநிதிக்காக பயன்படுத்த வேண்டும் " என உத்தரவிட்டனர்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x