

லக்னோ
பாஜக எம்.பி. ரமாதேவி குறித்து பாலியல் ரீதியாக கருத்து தெரிவித்த ஆசம்கான் மக்களவையில் மன்னிப்பு கேட்டால் போதாதது, நாடுமுழுவதும் உள்ள அனைத்து பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்திள்ளார்.
மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத காரணத்தால் அவையை பாஜக எம்.பி. ரமாதேவி நடத்தினார். அப்போது முத்தலாக் மசோதா குறித்து சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் பேசும்போது, மற்ற உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு செய்தனர்.
அப்போது பேசிய ரமாதேவி, “மற்ற உறுப்பினர் களுக்கு நீங்கள் (ஆசம்கான்) பதிலளிக்கவேண்டாம். நீங்கள் சபாநாயகரை பார்த்து பேசுங்கள்” என்றார்.
அப்போது ரமாதேவி குறித்து பாலியல் ரீதியாக ஆட்சேபகரமான கருத்தை ஆசம்கான் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளதாவது
‘‘சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. ரமாதேவி குறித்து கூறிய பாலியல் ரீதியான கருத்துக்கள் கண்டிக்கதக்கது. அவரது கருத்து பெண்களுக்கு எதிரானது. பெண்களை கேவலமாக கூறும் இதுபோன்ற கருத்துக்களை ஏற்க முடியாது. மக்களவையில் அவர் மன்னிப்பு கேட்டால் போதாது. அவர் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.