

புதுடெல்லி
பாஜக எம்.பி. ரமாதேவி பற்றி பாலியல் ரீதியாக கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் இன்று பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆசம்கான் பேச்சு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்
மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத காரணத்தால் அவையை பாஜக எம்.பி. ரமாதேவி நடத்தினார். அப்போது முத்தலாக் மசோதா தொடர்பான விவா
தம் நடைபெற்று வந்தது.
மசோதா குறித்து சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் பேசும்போது, மற்ற உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு செய்தனர். அப்போது பேசிய ரமாதேவி, “மற்ற உறுப்பினர் களுக்கு நீங்கள் (ஆசம்கான்) பதிலளிக்கவேண்டாம். நீங்கள் உங்கள் கருத்தை அவைக்குத் தெரிவியுங்கள்” என்றார்.
அப்போது ரமாதேவி குறித்து பாலியல் ரீதியாக ஆட்சேபகரமான கருத்தை ஆசம்கான் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மக்களவையில் இந்த விவகாரத்தை பெண் எம்.பி.க்கள் கட்சி பாகுபாடின்றி எழுப்பினர்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசகையில் ‘‘எம்.பி.க்களாக இருக்கும் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலான இவரது கருத்து கடும் கண்டனத்துக்குரியது. தொடர்ந்து இதுபோன்று பேசுவதை ஏற்க முடியாது. இனிமேலும் பெண் எம்.பி.க்கள் அமைதியாக இருக்க முடியாது. ஒரே குரலில் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்’’ என்றார். ஸ்மருதி இரானியை ஆதரித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆசம்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்கரவர்த்தி பேசுகையில் ‘‘நாடாளுமன்றத்தில் யாரும் இதுபோன்று எந்த ஒரு பெண்ணையும் பார்த்து பேசக்கூடாது. பெண்களின் கண்களை பார்த்து மட்டுமே பேச வேண்டும். எனவே ஆசம்கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அவையில் உள்ள அனைத்து பெண் எம்.பி.க்களும் உங்களிடம் இதனை எதிர்பார்க்கிறோம்’’ எனக் கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பெண்களிடம் கண்ணியமாக அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்சி எம்.பி.க்களும் ரமாதேவிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஆசம்கான் பேச்சு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.