

டேராடூன், பிடிஐ
விலங்குகளில், பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது, சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் பசு மாடு அருகே நின்றால் சரியாகும் என்று உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பசு மாடு குறித்துப் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், " விலங்குகளில் பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆஸ்ஸிஜனை மட்டுமே வெளியிடுகிறது. சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் பசு மாட்டின் அருகே நின்று அதனை தடவிக்கொடுத்தால் சரியாகிவிடும்.
பசு மாட்டை நாம் மாதா என்று அழைப்பதால்தான், அது மனிதர்கள் சுவாசிக்க பிராணவாயுவை(ஆக்ஸிஜன்) வெளியிடுகிறது. பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவை மனிதர்களின் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கிட்னி, இதயத்துக்கு உகந்தது. காசநோய் இருப்பவர்கள் பசு மாட்டின் அருகே நின்றுவந்தால் குணமாகும் என்று அறிவியல் அறிஞர்கள் சான்று அளித்துள்ளார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ராவத்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து முதல்வர் அலுவலகத்திடம் நிருபர்கள் கேட்டபோது, " உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்கள், பசுமாட்டுடன் நெருங்கிப் பழகிவருகிறார்கள், தெய்வமாக வணங்குகிறார்கள் எனும் அடிப்படையில் முதல்வர் பேசியுள்ளார்.
மக்களின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பசு மாடு ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது என்று மக்கள் நம்புகிறார்கள். அதைத்தான் முதல்வர் தெரிவித்தார். பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றுக்கு மருத்துவ குணம் இருப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
பசு மாடு ஆக்ஸிஜனை வெளியிடுவது குறித்து விலங்கியல் ஆய்வாளரிடம் கேட்டபோது, அவர்கள் கூறுகையில் " பசு மாடு அதிகமான மீத்தேன் வாயு வெளியிடுகிறது. விலங்குகளில் பசு மட்டுமே மீத்தேன் வாயுவை அதிகமாக வெளியிடுகிறது. இது ஓசோன் படலத்துக்கும் நல்லதல்ல " எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையை பாஜக தலைவரும், நைனிடால் எம்.பி.யுமான அஜெய் பாட் சமீபத்தில் கூறுகையில், " பாகேஸ்வர் மாவட்டத்தில் இருந்து பாயும் கருட் கங்கா ஆற்றின் நீரைக் குடித்தால் பெண்கள் அறுவைசிகிச்சையின்றி குழந்தை பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.