

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரின் கூட்டறிக்கையை பின் பற்றி நடப்போம் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் உஃபா நகரில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடியும் நவாஸும் சந்தித்துப் பேசினர். அதன்பின் இரு தலைவர்களின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பாகிஸ்தானில் நடை பெறும் மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. மேலும் கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் சர்தாஜ் ஆசிஷ் நேற்றுமுன் தினம் அளித்த பேட்டியில், இரு நாட்டு பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் இடம்பெறவில்லை யென்றால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் மும்பை தாக்குதல் சம்ப வத்தில் மூளையாகச் செயல்பட்ட ஜகியூர் ரஹ்மான் லக்வி விவகாரத் தில் கூடுதல் ஆதாரங்களை அளித்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.
இந்தியாவின் நிலைப்பாடு
இதுதொடர்பாக இந்திய அரசி யல் வட்டாரங்கள் கூறியதாவது:
உள்ளூர் அரசியல் காரணமாக ஆசிஷ் இவ்வாறு பேசியுள்ளார். அவரது கருத்தை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
மோடி, நவாஸ் சார்பில் வெளி யிடப்பட்ட கூட்டறிக்கை நேர்மை யானது, நம்பகத்தன்மையானது. அந்த கூட்டறிக்கையை பின்பற்றி நடப்போம்.
முதல்கட்டமாக தேசிய பாது காப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதேபோல எல்லை பாதுகாப்புப் படை தலைவர்கள் சந்தித்துப் பேசுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அரசு தனது நிலையில் இருந்து பின்வாங்காது என்று உறுதியாக நம்புகிறோம்.
நவாஸை அவமதிக்கவில்லை
உஃபா மாநாட்டில் பிரதமர் மோடி நின்று கொண்டிருந்ததாகவும் அவரை தேடி பிரதமர் நவாஸ் நடந்து சென்றதாகவும் சிலர் எதிர் மறையான கருத்துகளை வெளி யிட்டு வருகின்றனர். அதில் உண்மையில்லை.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் நவாஸ் அவரைச் சந்தித்துப் பேசினார். அதனால் நவாஸுக்காக அவர் காத்திருந்தார். அதுவே நவாஸ் அழைப்பு விடுத்திருந்தால் மோடி அவரை நேரில் சென்று பார்த்திருப்பார்.
லக்வியின் குரல் பதிவை பெற முடியாது என்று பாகிஸ்தான் அரசு வழக்கறிஞர் கூறியிருப்து குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான கூட்டத்தின்போது விவாதிக்கப்படும். லக்விக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. அதை பாகிஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.