

புதுடெல்லி
மக்களவையில் தன்னை பற்றி ஆட்சேபகரமான கருத்தை தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக எம்.பி. ரமாதேவி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத காரணத்தால் அவையை பாஜக எம்.பி. ரமாதேவி நடத்தினார். அப்போது முத்தலாக் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.
மசோதா குறித்து சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் பேசும்போது, மற்ற உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு செய்தனர். அப்போது பேசிய ரமாதேவி, “மற்ற உறுப்பினர் களுக்கு நீங்கள் (ஆசம்கான்) பதிலளிக்கவேண்டாம். நீங்கள் உங்கள் கருத்தை அவைக்குத் தெரிவியுங்கள்” என்றார்.
அப்போது ரமாதேவி குறித்து ஒரு ஆட்சேபகரமான கருத்தை ஆசம்கான் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பாஜக உறுப்பினர் கள் ஆசம்கான் மன்னிப்புக் கோர வேண்டும் என கோஷமிட்டனர்.
அப்போது பேசிய ஆசம்கான், “நீங்கள்(ரமாதேவி) மிகவும் மதிப்பு மிக்கவர். நீங்கள் என் சகோதரி போன்றவர்” என்று ரமாதேவியை நோக்கிப் பேசினார்.
இந்தநிலையில் இந்த விவகாரத்தை பாஜக எம்.பி. ரமாதேவி மீண்டும் எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘அசம்கான் தொடர்ந்து பெண் எம்.பி.களுக்கு எதிராக பேசி வருகிறார். முன்பு ஜெயப்பிரதா பற்றி விமர்சித்தார். பெண்கள் மீது அவருக்கு மரியாதை இல்லை. இதுவரை அவர் மன்னிப்பு கோரவில்லை. அவர் அவையில் இருக்கும் தகுதியை இழந்துவிட்டார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். சபநாயகர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.