கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்பு: ஆந்திர போலீஸாருக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த பெற்றோர்

கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்பு: ஆந்திர போலீஸாருக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த பெற்றோர்
Updated on
1 min read

ஆந்திராவில் கடந்த  திங்கள் அன்று அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட 4 வயது சிறுவனை நேற்று (வியாழக்கிழமை) மீட்ட போலீஸார் பெற்றோருடன் சேர்த்துவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் மீட்கப்பட்டதற்கு ஊடகமும் துணை நின்றதாகக் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள மடபேட்டா நகராட்சியில் உள்ள தனது வீட்டின் அருகே,  உள்ள பகுதியில் கடந்த திங்கட்கிழமை, தனது பாட்டியுடன் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்த நுகா ஜாசித் என்ற 4 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர்  கடத்தினார். 

சிறுவன் காணாமல் போனது குறித்து புகாரைப்பெற்ற போலீஸார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். காவல் அதிகாரிகள் அடங்கிய 17தனிப்படைகள் அமைத்து களத்தில் இறங்கினர். ஊடகங்களில் சிறுவனின் படம் வெளியிடப்பட்டது.

சிறுவன் கடத்தப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக ஒரு சம்பவம் நடந்தது. போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஏற்பட்ட நெருக்குதல் காரணமாக, நேற்று ராயவரம் அருகே குட்டுகுலுரு கிராமப் பகுதியில் செங்கற்சூளை அருகே சிறுவனை கொண்டுவந்து விட்டுவிட்டு கடத்தல்கார்கள் தப்பி ஓடிவிட்டனர். 

தனியாக நின்ற சிறுவனைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். செங்கல் சூளைப் பகுதிக்கு விரைந்த போலீஸார் சிறுவனை மீட்டனர். மடப்பேட்டா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவன் பாதுகாப்பாக இருப்பதை கிழக்கு கோதாவரி எஸ்.பி., நயீம் அஸ்மி உறுதிப்படுத்தினார்.

போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் இனியும் தாமதித்தால் சிக்கல் ஏற்படும் என்பதாலேயே சிறுவனை அவர்கள் விட்டுவிட்டுச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். 

கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் ஜாசித் உடல்நிலைக்கு எந்த ஆபத்துமில்லை என்பதை அறிந்த பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர், மேலும்  கடத்தல்காரர்களுடன் இருந்தது குறித்தான எந்தவித பயமும் அச்சிறுவனுக்கு இல்லை.  தன்னை ''தந்திரமாக பேசி அழைத்துச் சென்ற நபர்களில் ஒருவரின் பெயர் ராஜு'' என்று சிறுவன் தெரிவித்தார்.

காவல்துறை, ஊடகங்களுக்கு நன்றி

ஜாசித்தின் குடும்ப உறுப்பினர்கள் விரைவான நடவடிக்கைக்கு காவல்துறையைப் பாராட்டினர், மேலும் அவர்களுக்கு ஆதரவளித்த ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

காவல் கண்காணிப்பாளர் நயீம் அஸ்மி மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், "ஜாசித் எங்களுக்கு சில தடயங்களையும் பெயர்களையும் கொடுத்துள்ளார். இதனுடன் நாங்கள் சேகரித்த ஒவ்வொரு தகவலையும் வைத்து அவர்களையும் அவர்களது இருப்பிடத்தை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், இந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பின்னால் தனிப்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. கடத்தல்காரர்களை கைது செய்ய  தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in