

பெங்களூரு
கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார். இன்று மாலை 6 மணிக்கு அவர் முதல்வராக பதவியேற்கிறார்.
கர்நாடக்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை விலக்கியதால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது.
இதையடுத்து, முதல்வராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால், ஆட்சி கவிழ்ந்தது.
மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான 105 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உடனடியாக உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை அவசரப்பட வேண்டாம் என கட்சித் தலைமை கேட்டுக் கொண்டது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ் குமார் இன்னமும் முடிவெடுக்கவில்லை. புதிய அரசு அமைந்தாலும் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என பாஜக தலைமை சட்ட ஆலோசகர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியது.
இதைத்தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டார், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோரை டெல்லிக்கு அழைத்து பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே எடியூரப்பா இன்று கர்நாடாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இன்றே பதவி ஏற்பு இன்றே நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை ஆட்சியமைக்க வருமாறு அவருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இன்று மாலை 6 மணியளவில் பதவியேற்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
இதனிடையே கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்த ரமேஷ் ஜாரக்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, சுயேச்சை எம்எல்ஏவான ஆர். சங்கர் ஆகியோரை 2023-ம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் ( 2) கூட்டணியின் பலம் 118 ஆக இருந்தது.
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், 2 சுயேச்சைகளும் ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் அந்த கூட்டணியின் பலம் 100-ஆக குறைந்தது.
பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது. அதே வேளை 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது.