Published : 29 May 2014 03:56 PM
Last Updated : 29 May 2014 03:56 PM

நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் 10 அம்ச திட்டம்

மத்தியில் நல்லாட்சி வழங்க 10 அம்ச கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுமாறு அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். முதல் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் 2-வது அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதல் 100 நாள்

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் களுக்கு மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக முதல் 100 நாட்களை இலக்காக வைத்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டார். மத்தியில் நல்லாட்சிக்கு 10 அம்ச கொள்கை திட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிக்குமாறும் அனைத்து அமைச்சர்களையும் அவர் அறிவுறுத்தினார்.

அந்த 10 அம்ச திட்டங்கள் வருமாறு:

1. அதிகாரிகள் நிலையில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் பணியாற்ற முடியும்.

2. அதிகாரிகள் முழு சுதந்திரத்துடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களின் புதுமையான சிந்தனைகள், ஆலோசனைகளை அரசுக்கு தெரிவிக்கலாம்.

3. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், சாலை வசதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

4. அரசு நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். இதற்காக இ-டெண்டர் உள்ளிட்ட மின்னணு நிர்வாகத்தை ஊக்குவிக்க வேண்டும்.

5. அமைச்சகங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைப்பை அதிகரிக்க முன்மாதிரி கொள்கை திட்டம் கொண்டு வரப்படும்.

6. மக்கள் நலன் சார்ந்த கொள்கை திட்டம் வரையறுக்கப்படும். மக்கள் நலப் பணிகளுக்காக அரசு இயந்திரத்தை அமைச்சர்கள் முடுக்கிவிட வேண்டும்.

7. பொருளாதார வளர்ச்சி சார்ந்த விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

8. உள்கட்டமைப்பு, முதலீட்டில் சீர்திருத்தங்களைப் புகுத்த வேண்டும்.

9. எந்தவொரு திட்டமானாலும் குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயித்து அதற்குள் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

10. அரசு கொள்கைகளில் நிலையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை திறமையாக செயல்படுத்த வேண்டும்.

வெங்கய்ய நாயுடு பேட்டி

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:

கொள்கைசார்ந்த முடிவுகளை கேபினட் அமைச்சர்கள் மட்டுமே எடுக்க வேண்டும். எனினும் அந்தந்த துறை சார்ந்த இணை அமைச்சர்களுக்கு உரிய பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு அமைச்சரும் முதல் 100 நாளில் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட வேண்டும். அந்தப் பணி களுக்கு காலஅவகாசத்தை நிர்ணயித்து அதற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மாநில அரசுகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாநில அரசுகளிடம் இருந்து வரும் கடிதங்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x