எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

இந்த சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 19-ம் தேதி  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. 

பிறகு இந்தத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமா அல்லது வேண்டாமா என்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அனுப்புவதற்கு எதிராக 117 வாக்குகளும் அனுப்புவதற்கு ஆதரவாக 75 வாக்குகளும் பதிவானதால் நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 

நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்புவது என்பது மசோதாவின் சாதக பாதகங்களை அலசுவதற்குத்தானே தவிர அதனை எண்கள் தீர்மானிக்கக் கூடாது என்றும் ஒரு ஆட்சேபணை முன் வைக்கப்பட்டது. 

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா  மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளதால், இந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 

ஆர்டிஐ சட்டத்தின்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளன. மேலும் அவரின் ஊதியம் தேர்தல் ஆணையருக்கு நிகராக உள்ளது. இனிமேல் தகவல் ஆணையரின் ஊதியம், பதவிக் காலம் மற்றும் நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று இந்தச் சட்டத் திருத்த மசோதா வழிவகுத்துள்ளது. இந்த மசோதா ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 13,16,27 ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது

மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும். தகவல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை சீர்குலைக்கும். எனவே இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in