Published : 25 Jul 2019 04:35 PM
Last Updated : 25 Jul 2019 04:35 PM

முத்தலாக் தடை மசோதாவுக்கு பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் கட்சி எதிர்ப்பு

புதுடெல்லி:

மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தின் போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

மக்களவையில் இன்று முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார். 

முத்தலாக் மசோதா கடந்த 16-வது மக்களவையின் போது தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் மத்திய அரசுக்குப் போதுமான பலம் இல்லாத காரணத்தால், அது நிறைவேற்றப்படவில்லை. இதனால், 16-வது மக்களவை முடிந்த நிலையில், அந்த  முத்தலாக் மசோதாவும் மாநிலங்களவையில் காலாவதியாகிவிட்டது. இதைத்தொடர்ந்து முத்தலாக் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்த நிலையில், அதைச் சட்டமாக்கும் வகையில் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ராஜீவ் ரஞ்சன் சிங் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்தபோதிலும் இந்த மசோதாவை எதிர்த்ததால் வியப்பளித்தது. 

அந்த மசோதாவின் மீது ராஜீவ் ரஞ்சன் சிங் பேசுகையில், "இந்த முத்தலாக் மசோதாவால், சமூகத்தில் குறிப்பிட்ட மதத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று எங்கள் கட்சி நம்புகிறது. சமூகத்தில் முரண்பாடான உணர்வுகளை இந்த மசோதா கொண்டு வரும். ஏனென்றால், கணவன் மற்றும் மனைவி உறவுகளுக்கு இடையே எந்தவிதமான முரண்பாடான உணர்வுகள் வரக்கூடாது என்று ஒவ்வொருவரும் விரும்புவார்கள்.  முத்தலாக் என்பது சமூகப் பிரச்சினை. சமூக அளவில் இதுகுறித்து விவாதித்துதான் தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்த முத்தலாக் மசோதாவுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடுமையாக வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தார். முத்தலாக் மசோதா தவிர்த்து மத்திய அரசு கொண்டுவர இருக்கும் அரசமைப்பு 370 பிரிவு, ஒரேமாதிரியான சிவில் சிட்டம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது போன்ற கொள்கைகளில் இருந்து நிதிஷ் குமார் கடுமையாக வேறுபடுகிறார் என்பது குறிப்படத்தக்கது.

புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதாவில், முத்தலாக் விஷயத்தைச் செயல்படுத்தும் கணவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

-ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x