

புதுடெல்லி
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளைத் தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியுள்ள மாவட்டந்தோறும் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்பு நீதிமன்றங்களை அடுத்த 2 மாத காலத்துக்குள் அமைக்க வேண்டும், 4 வாரத்துக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில், " கடந்த 2019,ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதிவரையிலான மாதங்களில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 212 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 ஆயிரத்து 981 வழக்குகளில் விசாரணை நடக்கிறது, 12 ஆயிரத்து 231 வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 6 ஆயிரத்து 449 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிந்துள்ளது.
4,871 வழக்குகளில் விசாரணை தொடங்கவே இல்லை. 911 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களை பிரத்தியேகமாக அமைக்க வேண்டும், விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பல்வேறு உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்தனர்.
மத்தியஅரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி இருந்தார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் " குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போக்ஸோ சட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நாடுமுழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் வழக்குகளை விசாரிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அடுத்த 60 நாட்களுக்குள் அமைக்க வேண்டும்.
இந்த நீதிமன்றங்கள் அனைத்தும், மத்திய அரசின் நிதியில் இருந்து செயல்பட வேண்டும். அதாவது, இந்த நீதிமன்றத்தின் அதிகாரிகள், ஊழியர்கள், சார்பு ஊழியர்கள், குழந்தைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் அனைத்துக்கும் மத்திய அரசுதான் நிதி வழங்க வேண்டும். அடுத்த 4 வாரங்களுக்குள் இந்த உத்தரவின் கீழ் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் " என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பேசுகையில், " பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்துக்கு மன்னிப்பு அளிக்க முடியாது. மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட பாதிக்கப்பட்ட குழந்தைகளை கருணையுடனும், அன்புடனும் நடத்த வேண்டும். போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் போது, முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொள்வது அவசியம்.
ஏற்கனவே, போக்ஸோ வழக்குகளை விசாரிக்க இரு நீதிமன்றங்கள் டெல்லியில் இருந்தாலும் அதைப்பற்றி இப்போது பேசவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் போக்ஸோ நீதிமன்றங்கள் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே பெரிய திரையை உருவாக்க முடியும். ஆனால், போக்ஸோ நீதிமன்றம் ஏதோ சிறிய அறையில் அடிப்படை வசதிகள் இன்றிதான் செயல்படுகிறது. இந்த சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு தேவையான நிதி ஆதாரங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிடுகிறேன்" எனத் தெரிவித்தார்
பிடிஐ